விளையாட்டு

3-வது இடம் யாருக்கு? - பிரேசில்-நெதர்லாந்து இன்று பலப்பரீட்சை

செய்திப்பிரிவு

உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் 3-வது இடம் யாருக்கு என்பதைத் தீர்மானிப்பதற்கான ஆட்டம் பிரேசிலின் பிரேசிலியா நகரில் இன்று நடைபெறுகிறது. இதில் அரையிறுதியில் தோல்வி கண்ட பிரேசிலும் நெதர்லாந்தும் மோதுகின்றன.

போட்டியை நடத்தும் பிரேசில் அணியின் முதுகெலும்பாக திகழ்ந்த ஸ்டிரைக்கர் நெய்மரின் முதுகெலும்பு உடைந்ததால் அவரால் அரையிறுதியில் விளையாட முடியாமல் போனது. பிரேசிலும் 1-7 என்ற கோல் கணக்கில் ஜெர்மனியிடம் படுதோல்வி கண்டது. இதனால் பிரேசிலின் இதயமே நொறுங்கிப் போயிருக்கிறது. இந்த நிலையில் 3-வது இடத்துக்கான ஆட்டத்தில் விளையாடவுள்ள பிரேசில் அணி சிறப்பாக விளையாடி வெற்றி பெற வேண்டும் என நெய்மர் வலியுறுத்தியுள்ளார்.

ஆறுதல் கிடைக்குமா?

உலகக் கோப்பை கால்பந்து போட்டியைப் பொறுத்தவரையில் எல்லா அணிகளுமே கோப்பையை வெல்வதில் மட்டுமே தீவிரம் காட்டும். 3-வது இடத்துக்கான ஆட்டத்தில் விளையாடுவதை பெரிய அளவில் விரும்பாது. ஆனால் பிரேசில் அணி அரையிறுதியில் படுதோல்வி கண்டிருப்பதால், 3-வது இடத்துக்கான ஆட்டத்தில் சிறப்பாக விளையாடி ஆறுதல் தேடிக்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. பிரேசில் இந்த ஆட்டத்தில் வெற்றி பெறும் பட்சத்தில், அது ஜெர்மனியிடம் பிரேசில் தோல்வி கண்டதைப் பார்த்து கதறியழுத அந்நாட்டு ரசிகர்களின் மனக்காயத்திற்கும் மருந்தாக அமையும்.

மேக்ஸ்வெல்லுக்கு வாய்ப்பு?

சஸ்பெண்ட் காரணமாக கடந்த ஆட்டத்தில் விளையாடாத பிரேசில் கேப்டன் தியாகோ சில்வா, இந்த ஆட்டத்தில் களமிறங்குவது அந்த அணிக்கு ஆறுதல் அளிக்கும் விஷயமாகும். எனினும் நெய்மர் விளையாடாததால் மற்ற வீரர்கள் நம்பிக்கையை இழந்த நிலையிலேயே உள்ளனர். பிரேசில் தரப்பில் மேக்ஸ்வெல் மட்டுமே இந்த உலகக் கோப்பையில் ஓர் ஆட்டத்தில்கூட விளையாடவில்லை. அதனால் அவர் இந்த ஆட்டத்தில் விளையாடும் வாய்ப்பை பெறுவார் என தெரிகிறது.

பலம் வாய்ந்த நெதர்லாந்து

அதேநேரத்தில் நெதர்லாந்து அணியை சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது. 3-வது இடத்துக்கான ஆட்டத்தில் விளையாட அவர்கள் பெரிய அளவில் ஆர்வம் காட்டாவிட்டாலும், வெற்றியோடு உலகக் கோப்பை போட்டியை முடிப்பதில் தீவிரம் காட்டுவார்கள் என்பதில் சந்தேகமில்லை.

அர்ஜென்டீனாவுடன் கடுமையாகப் போராடி தோற்றிருக்கும் நெதர்லாந்து அணியை சமாளிக்க பிரேசில் கடுமையாகப் போராட வேண்டியிருக்கும். அர்ஜென் ராபன், வான் பெர்ஸி, ஸ்நைடர் என பலம் வாய்ந்த வீரர்களைக் கொண்டுள்ளது நெதர்லாந்து. அந்த அணியின் 3-வது கோல் கீப்பர் மைக்கேல் வார்ம் தவிர மற்ற அனைவரும் இந்த உலகக் கோப்பையில் விளையாடிவிட்டார்கள். அதனால் அவருக்கு இந்தப் போட்டியில் வாய்ப்பு கொடுக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு உள்ளது. பிரேசிலுடன் ஒப்பிடுகையில் நெதர்லாந்து பலமான அணியாக இருந்தாலும்கூட, பிரேசில் வீரர்கள் வெறியோடு விளையாடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

உலகக் கோப்பையில்…

உலகக் கோப்பையில் நெதர்லாந்தும் பிரேசிலும் 5-வது முறையாக மோதவுள்ளன. கடைசியாக மோதிய 4 ஆட்டங்களில் இரு அணிகளும் தலா 2 வெற்றிகளைப் பெற்றுள்ளன. கடைசியாக கடந்த உலகக் கோப்பையின் காலிறுதியில் இவ்விரு அணிகளும் மோதின. அதில் நெதர்லாந்து 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி கண்டது.

SCROLL FOR NEXT