உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் காலிறுதியில் நெதர்லாந்து அணி பெனால்டி ஷூட் அவுட் முறையில் 4-3 என்ற கோல் கணக்கில் கோஸ்டா ரிகாவை தோற்கடித்து அரையிறுதிக்கு முன்னேறியது.
விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் கூடுதல் நேரம் வரை இரு அணிகளும் கோல் அடிக்காததைத் தொடர்ந்து வெற்றியைத் தீர்மானிக்க, பெனால்டி ஷூட் அவுட் வாய்ப்பு வழங்கப்பட்டது. அப்போது களமிறங்கிய நெதர்லாந்தின் மாற்று கோல் கீப்பரான டிம் க்ருள், கோஸ்டா ரிகாவின் பிரையன் ரூயிஸ், மைக்கேல் உமன்னா ஆகியோர் அடித்த ஷாட்டை அற்புதமாக முறியடித்து தனது அணிக்கு வெற்றி தேடித்தந்தார்.
இதன்மூலம் 5-வது முறையாக அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது நெதர்லாந்து. முன்னதாக 1974, 1978, 2010 ஆகிய ஆண்டுகளில் இறுதிச்சுற்று வரை முன்னேறிய நெதர்லாந்து, 1998-ல் 4-வது இடத்தைப் பிடித்தது.
பிரேசிலின் சல்வடாரில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் இரு அணியின் வீரர்களுமே ஆக்ரோஷமாக ஆடினர். நெதர்லாந்து கேப்டன் வான் பெர்ஸி, அர்ஜென் ராபன், ஸ்நைடர் உள்ளிட்டோர் அடித்த கோல் முயற்சிகளை மிக அற்புதமாகத் தகர்த்தார் கோஸ்டா ரிகா கோல் கீப்பர் நவாஸ். இதனால் முதல் பாதி ஆட்டத்தில் கோல் எதுவும் கிடைக்காமல் போக, பின்னர் நடைபெற்ற 2-வது பாதி ஆட்டத்திலும் நெதர்லாந்து அணியின் கோல் முயற்சிகள் அனைத்தையும் நவாஸ் முறியடித்தார்.
அதேநேரத்தில் கோஸ்டா ரிகா அணி ஒரேயொரு ப்ரீ கிக் வாய்ப்பில் மட்டுமே நெதர்லாந்துக்கு அச்சுறுத்தலாக இருந்தது. எனினும் அது முறியடிக்கப்பட்டதால் ஆட்டம் கோலின்றி முடிவடைந்தது. இதையடுத்து வெற்றியைத் தீர்மானிக்க கூடுதல் நேரம் வழங்கப்பட அதிலும் கோலடிக்கப்படவில்லை.
இதைத் தொடர்ந்து பெனால்டி ஷூட் அவுட் வாய்ப்பு வழங்கப்பட்டது. அப்போது கோல் கீப்பர் கிளெஸ்ஸனை வெளியேற்றிவிட்டு மாற்று கோல் கீப்பர் டிம் க்ருள்ளை களமிறக்கினார் நெதர்லாந்து பயிற்சியாளர் வான் கேல்.
பெனால்டி ஷூட் அவுட்டில் முதலில் பந்தை உதைத்த கோஸ்டா ரிகாவின் போர்ஜஸ் கோலடிக்க, அடுத்ததாக நெதர்லாந்து கேப்டன் வான் பெர்ஸி கோலடித்தார். அடுத்த வாய்ப்பில் கோஸ்டா ரிகாவின் பிரையன் ரூயிஸ் பந்தை உதைக்க, அதை டிம் க்ருள் தகர்த்தார். அதேநேரத்தில் நெதர்லாந்தின் 2-வது வாய்ப்பில் பந்தை உதைத்த அர்ஜென் ராபன் கோலடிக்க, அந்த அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.
3-வது வாய்ப்பில் கோஸ்டா ரிகாவின் கொன்ஸாலெஸும் நெதர்லாந்தின் ஸ்நைடரும் கோலடிக்க, 4-வது வாய்ப்பில் கோஸ்டா ரிகாவின் போலனோஸும், நெதர்லாந்தின் டிர்க் குயட்டும் கோலடித்தனர்.
5-வது வாய்ப்பில் கோஸ்டா ரிகாவின் மைக்கேல் உமன்னா உதைத்த பந்தை டிக் க்ருள் இடதுபுறமாக பாய்ந்து தடுக்க, போட்டி முடிவுக்கு வந்தது. நெதர்லாந்து 4-3 என்ற கோல் கணக்கில் வெற்றி கண்டு அரையிறுதிக்கு முன்னேறியது.