உலகக் கோப்பை செஸ் தொடரின் அரை இறுதி ஆட்டத்தில் அமெரிக்காவின் ஃபேபியானோ கருனாவுடன் மோதிய பிரக்ஞானந்தா. 
விளையாட்டு

உலகக் கோப்பை செஸ் தொடர் | இறுதிப் போட்டியில் நுழைந்தார் கார்ல்சன்: ஃபேபியானோ - பிரக்ஞானந்தா ஆட்டம் மீண்டும் டிரா

செய்திப்பிரிவு

ஃபிடேவின்: உலகக் கோப்பை செஸ் தொடர் அஜர்பைஜானில் உள்ள பாகு நகரில் நடைபெற்று வருகிறது. இதன் அரை இறுதி ஆட்டத்தில் இந்திய கிராண்ட் மாஸ்டரான சென்னையை சேர்ந்த பிரக்ஞானந்தா, உலகத் தரவரிசையில் 2-வது இடத்தில் உள்ள அமெரிக்காவின் ஃபேபியானோ கருனாவுடன் மோதினார்.

நேற்று முன்தினம் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் கருப்பு நிற காய்களுடன் விளையாடிய பிரக்ஞானந்தா 78-வது காய் நகர்த்தலின் போது டிராவில் முடித்தார். இதனால் இருவருக்கும் தலா 0.5 புள்ளிகள் வழங்கப்பட்டது. அரை இறுதி சுற்றின் 2-வது ஆட்டம் நேற்று நடைபெற்றது. இதில் வெள்ளை நிற காய்களுடன் களமிறங்கிய பிரக்ஞானந்தா 47-வது காய் நகர்த்தலின் போது ஆட்டத்தை டிரா செய்தார்.

இரு ஆட்டங்களும் டிராவில் முடிவடைந்ததால் டை பிரேக்கர் மூலம் வெற்றியாளர் தீர்மானிக்கப்படுவார். இந்த ஆட்டம் இன்று நடைபெறுகிறது. மற்றொரு அரை இறுதியில் முதல் நிலை வீரரான நார்வேயின் மேக்னஸ் கார்ல்சன், அஜர்பைஜானின் நிஜாத் அபாசோவுடன் மோதினார். இதில் கார்ல்சன் 43-வது காய் நகர்த்தலின் போது வெற்றி பெற்று முழுமையாக ஒரு புள்ளியை பெற்றார். நேற்று நடைபெற்ற 2-வது ஆட்டத்தை கார்ல்சன் டிரா செய்து இறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

SCROLL FOR NEXT