டப்ளின்: ஜஸ்பிரீத் பும்ரா தலைமையிலான இளம் வீரர்களை உள்ளடக்கிய இந்திய கிரிக்கெட் அணி 3 டி 20 ஆட்டங்களில் விளையாடுவதற்காக அயர்லாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. டப்ளின் நகரில் நேற்றுமுன்தினம் இரவு நடைபெற்ற முதல் ஆட்டத்தில் பும்ராவை மையமாக கொண்ட பந்து வீச்சு குழு அயர்லாந்து அணியை 139 ரன்களுக்குள் மட்டுப்படுத்தியது.
140 ரன் இலக்கை இந்திய அணி துரத்திய நிலையில் 6.5 ஓவர்களில் 2விக்கெட்கள் இழப்புக்கு 47 ரன்கள் எடுத்திருந்த போது மழையால் ஆட்டம் தடைபட்டது. தொடர்ந்து போட்டியை நடத்த முடியாத நிலை ஏற்பட்டதால் வெற்றியை தீர்மானிக்க டக்வொர்த் லீவிஸ் விதி அமல்படுத்தப்பட்டது. இதில் இந்திய அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
இதன் மூலம் இந்திய அணி 3 ஆட்டங்கள் கொண்டடி 20 தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில் 2-வது ஆட்டத்தில் இரு அணிகளும் அதேமைதானத்தில் இன்று இரவு மோதுகின்றன. முதல் ஆட்டத்தில் இந்திய அணியின் பந்து வீச்சு சிறப்பாக அமைந்திருந்தது. 11 மாதங்களுக்குப் பிறகு அணிக்கு திரும்பி இருந்த ஜஸ்பிரீத் பும்ரா முதல் ஓவரிலேயே 2 விக்கெட்கள் வீழ்த்தி அசத்தினார்.
அவருக்கு உறுதுணையாக வீசிய பிரஷித் கிருஷ்ணா தனது அறிமுக ஆட்டத்திலேயே 2 விக்கெட்கள் வீழ்த்தி கவனத்தை ஈர்த்தார். சுழற்பந்து வீச்சாளர் ரவி பிஷ்னோயின் பந்து வீச்சும் தாக்கத்தை ஏற்படுத்தியது. 4 ஓவர்களை வீசிய அவர், 23 ரன்களை விட்டுக்கொடுத்த நிலையில் 2 விக்கெட்களை வீழ்த்தி இருந்தார். இந்த பந்து வீச்சு கூட்டணியிடம் இருந்து மீண்டும் ஒரு சிறந்த செயல்திறன் வெளிப்படக்கூடும்.
பேட்டிங்கை பொறுத்தவரையில் யஷஸ்வி ஜெய்ஸ்வால், ருதுராஜ் கெய்க்வாட் ஆகியோர் சிறப்பான வகையில் தொடங்கினர். இன்றைய ஆட்டம் மழையால் பாதிக்கப்படாமல் இருக்கும் பட்சத்தில் ஷிவம் துபே, ரிங்கு சிங், திலக் வர்மா, சஞ்சு சாம்சன் ஆகியோருக்கு மட்டை வீச்சில் போதிய வாய்ப்பு கிடைக்கக்கூடும்.
முதல் ஆட்டத்தில் அயர்லாந்தை பொறுத்த வரையில், பும்ரா தனது முதல் ஓவரிலேயே இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்திய பிறகு, கடுமையாக போராடினார்கள். பார்ரி மெக்கார்த்தி விளாசிய அரை சதத்தின் காரணமாகவே சற்று கவுரவமான இலக்கை அந்த அணியால் கொடுக்க முடிந்தது. நட்சத்திர வீரர்கள் இல்லாத நிலையிலும் பலம் வாய்ந்த அணியாக திகழும் இந்தியாவுக்கு சவால் அளிக்க வேண்டும் என்றால் அயர்லாந்து அணி பேட்டிங்கில்மிகவும் மேம்பட்ட ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும்.