பாரீஸ்: உலக வில்வித்தையில் ஆடவர், மகளிருக்கான காம்பவுண்ட் அணிகள் பிரிவில் இந்தியா தங்கப் பதக்கம் வென்றது.
உலக வில்வித்தையின் 4வது நிலை போட்டிகள் பாரீஸ் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் ஆடவருக்கான காம்பவுண்ட் அணிகள் பிரிவில் ஓஜஸ் பிரவின் தியோடலே, பிரதமேஷ் ஜாவ்கர், அபிஷேக் வர்மா ஆகியோரை உள்ளடக்கிய இந்திய அணி இறுதிப் போட்டியில் 236-232 என்ற கணக்கில் அமெரிக்காவை வீழ்த்தி தங்கப் பதக்கம் வென்றது.
ஆடவர் பிரிவில் 14 அணிகள் கலந்துகொண்ட தகுதி சுற்றில்இந்திய அணி 2,127 புள்ளிகளைகுவித்து 4வது இடம் பிடித்திருந்தது. தொடர்ந்து நடைபெற்ற கால் இறுதிக்கு முந்தைய சுற்றில் இத்தாலியையும், கால் இறுதி சுற்றில் மெக்சிகோவையும் வென்றது. அரை இறுதியில் கொரியாவை வீழ்த்தி இறுதிப் போட்டியில் கால்பதித்திருந்தது.
மகளிருக்கான காம்பவுண்ட் அணிகள் பிரிவில் அதிதி கோபிசந்த் சுவாமி, ஜோதி சுரேகா வென்னம், பர்னீத் கவுர் ஆகியோரை கொண்ட இந்திய அணி இறுதிப் போட்டியில் 234-233 என்ற கணக்கில் மெக்சிகோ அணியை வீழ்த்தி தங்கப் பதக்கம் வென்றது.
மகளிர் பிரிவில் இந்திய அணி 2,113 புள்ளிகள் குவித்து தகுதி சுற்றில் முதலிடம் பிடித்திருந்தது. முதல் சுற்றில் இந்திய மகளிர் அணிக்கு பை வழங்கப்பட்டிருந்தது. கால் இறுதி சுற்றில் எஸ்டோனியாவை வீழ்த்திய இந்திய அணி அதன் பின்னர் இறுதி சுற்றில் பிரிட்டனை தோற்கடித்தது.
மகளிருக்கான காம்பவுண்ட் தனிநபர் பிரிவில் இந்தியாவின் ஜோதி சுரேகா வென்னம் வெண்கலப் பதக்கம் வென்றார். மற்ற இந்திய வீராங்கனைகளான அவ்னீத் கவுர், பிரனீத் கவுர் ஆகியோர் 2வது சுற்றுடன் வெளியேறினர். அதிதி கோபிசந்த் கால் இறுதியில் தோல்வி அடைந்தார்.