புடாபெஸ்ட்: உலக தடகள சாம்பியன்ஷிப்பில் ஆடவருக்கான 3000 மீட்டர் ஸ்டீபிள் சேஸில் தேசிய சாதனையாளரான இந்தியாவின் அவினாஷ் சேபிள் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறத் தவறினார். இதேபோன்று மகளிருக்கான நீளம் தாண்டுதலில் இந்தியாவின் ஷாய்லி சிங்கும் ஏமாற்றம் அளித்தார்.
உலக தடகள சாம்பியன்ஷிப் ஹங்கேரி நாட்டில் உள்ள புடாபெஸ்ட் நகரில் நேற்று தொடங்கியது. இதில் ஆடவருக்கான 3000 மீட்டர் ஸ்டீபிள் சேஸில் தேசிய சாதனையாளரான இந்தியாவின் அவினாஷ் சேபிள் ஹீட் பிரிவில் 8 நிமிடங்கள் 22.24 விநாடிகளில் கடந்து 7-வது இடம் பிடித்து ஏமாற்றம் அளித்தார். ஹீட்பிரிவில் முதல் 5 இடங்களை பிடிக்கும் வீரர்களே இறுதிப் போட்டிக்கு முன்னேறுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
2,300 மீட்டர் வரை அவினாஷ் சேபிள்முன்னிலையில் இருந்தார். ஆனால் அதன் பின்னர் அவர், வேகத்தை இழந்தார். அவர், இலக்கை அடைந்துள்ள நேரம் அவரது தேசிய சாதனையைவிட (8:11.20) மோசமானதாக அமைந்துள்ளது. சேபிள்இறுதிப் போட்டிக்கு நிச்சயம் தகுதி பெறுவார் என அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டிருந்தது. ஆனால் இந்த எதிர்பார்ப்பை அவர், பூர்த்தி செய்யத் தவறினார்.
உலக சாம்பியன்ஷிப்பில் 3-வது முறையாக பங்கேற்றுள்ள சேபிள், இம்முறையும் இறுதி சுற்றை எட்டாமல் வெளியேறி உள்ளார்.
கடந்த ஆண்டு அமெரிக்காவில் நடைபெற்ற தொடரில் 11-வது இடம் பிடித்திருந்தார். 2019-ம் ஆண்டு தோஹா தொடரில் 13-வது இடத்தை எட்டியிருந்தார்.
உலக சாதனையாளரான எத்தியோப்பாவின் லமேச்சா கிர்மா 8:15.89 விநாடிகளில் இலக்கை எட்டி தனது ஹீட் பிரிவில் முதலிடம் பிடித்து இறதி சுற்றுக்கு முன்னேறினார். ஒலிம்பிக் மற்றும் உலகசாம்பியனான மொராக்கோவின் சோஃபியேன் எல் பக்காலி தனது ஹீட் பிரிவில் 2வது இடம் பிடித்தார். அவர், இலக்கை 8:23.66 விநாடிகளில் கடந்திருந்தார்.
ஆடவருக்கான 20 கிலோ மீட்டர் நடை பந்தயத்தில் இந்தியாவின் விகாஷ்சிங் பந்தய தூரத்தை 1 மணி நேரம் 21 நிமிடங்கள் 58 விநாடிகளில் கடந்து 28-வது இடம் பிடித்து ஏமாற்றம் அளித்தார். மற்ற இந்திய வீரர்களான பரம்ஜித் சிங் (1:24:02) 35-வது இடத்தையும், ஆகாஷ்தீப் சிங் (1:31:12) 47-வது இடத்தையும் பிடித்தனர். இந்த பந்தயத்தில் மொத்தம் 50 வீரர்கள் பங்கேற்றனர். இதில் 2 பேர் பந்தயத்தை நிறைவு செய்யவில்லை. ஒரு வீரர் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். அந்த வகையில் ஆகாஷ்தீப் கடைசி இடத்தை பெற்றுள்ளார்.
ஸ்பெயினின் ஆல்வரோ மார்ட்டின் பந்தய தூரத்தை 1:17:32 விநாடிகளில் கடந்து தங்கப் பதக்கம் வென்றார். ஸ்வீடனின் பெர்சியஸ் கார்ல்ஸ்ட்ரோம் (1:17:39) வெள்ளிப் பதக்கமும், பிரேசிலின் கயோ போன்ஃபிம் ( 1:17:47) வெண்கலப் பதக்கமும் வென்றனர்.
ஷாய்லி சிங்: மகளிருக்கான நீளம் தாண்டுதலில் இந்தியாவின் ஷாய்லி சிங் தகுதி சுற்றில் ‘பி’ பிரிவில் 14-வது இடத்தை பிடித்து இறுதி சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தார். அவர், அதிகபட்சமாக 6.40 மீட்டர் நீளம் தாண்டினார். 19 வயதான ஷாய்லி சிங்கின் சிறப்பான செயல் திறன் 6.76 மீட்டர் ஆகும். ஆனால் இம்முறை அவர், உயர்மட்ட செயல்திறனை வெளிப்படுத்தத் தவறினார்.
ஒட்டுமொத்தமாக இரு பிரிவில் நடைபெற்ற தகுதி சுற்றிலும் ஷாய்லி சிங்கிற்கு24-வது இடமே கிடைத்தது. முதல் வாய்ப்பில் 6.26 மீட்டர் நீளமும், 2வது வாய்ப்பில் 6.40 மீட்டர் நீளமும், கடைசி வாய்ப்பில் 6.30 மீட்டர் நீளமும் தாண்டினார் ஷாய்லி சிங். மொத்தம் 36 வீராங்கனைகள் கலந்து கொண்ட இந்த போட்டியில் முதல் 12 இடங்களை பிடிப்பவர்கள் மட்டுமே இறுதிப் போட்டிக்கு முன்னேற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.