புடாபெஸ்ட்: உலக தடகள சாம்பியன்ஷிப் தொடர் ஹங்கேரியில் உள்ள புடாபெஸ்ட் நகரில் இன்று தொடங்குகிறது. வரும் 27-ம் தேதி வரை நடைபெற உள்ள இந்த தொடரில் இந்திய ஈட்டி எறிதல் நட்சத்திர வீரர் நீரஜ் சோப்ரா தங்கப் பதக்கம் வெல்லக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்ட்டில் உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி இன்று (19-ம் தேதி) தொடங்கி வரும் 27-ம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் ஆடவருக்கான ஈட்டி எறிதலில் களமிறங்கும் இந்தியாவின் நட்சத்திர வீரரான நீரஜ் சோப்ரா மீது அதிக எதிர்பார்ப்பு உள்ளது. 25 வயதான நீரஜ் சோப்ரா, 2021-ம் ஆண்டு டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கம், 2018-ம் ஆண்டு ஆசிய விளையாட்டில் தங்கம், அதே ஆண்டில் காமன்வெல்த் விளையாட்டில் தங்கம் வென்று அசத்தினார்.
கடந்த ஆண்டு டைமண்ட் லீக்கிலும் சாம்பியன் பட்டம் வென்றார். உலக தடகள சாம்பியன்ஷிப்பில் மட்டுமே நீரஜ் சோப்ரா இதுரை தங்கம் வெல்லவில்லை. கடந்த 2018-ம் ஆண்டு அமெரிக்காவில் நடைபெற்ற உலக தடகள சாம்பியன்ஷிப்பில் அவர், வெள்ளிப் பதக்கம் வென்றிருந்தார். தற்போது சிறந்த பார்மில் இருப்பதால் நீரஜ் சோப்ரா தங்கப் பதக்கம் வெல்லக்கூடிய வீரர்களில் முதன்மையான வீரராக திகழ்கிறார்.
உலக தடகள சாம்பியன்ஷிப்பில் ஆடவருக்கான ஈட்டி எறிதல் போட்டியின் தகுதி சுற்று 25 மற்றும் 26-ம் தேதிகளில் நடைபெறுகிறது. தொடர்ந்து இறுதிப் போட்டி நிறைவு நாளான 27-ம் தேதி நடைபெறுகின்றது. இம்முறை நீரஜ் சோப்ரா தங்கப் பதக்கம் வென்றால், துப்பாக்கி சுடுதல் வீரர் அபினவ் பிந்த்ராவுக்குப் பிறகு ஒலிம்பிக் மற்றும் உலக சாம்பியன்ஷிப் போட்டிகளில் தனிநபர் விளையாட்டில் தங்கப் பதக்கம் வென்ற 2-வது இந்தியர் என்ற பெருமையை பெறுவார்.
2008-ம் ஆண்டு ஒலிம்பிக்கில் அபினவ் பிந்த்ரா தங்கம் வென்றிருந்தார். இதன் மூலம் ஒலிம்பிக்கில் தனிபர் போட்டியில் தங்கம் வென்ற முதல் இந்திய வீரர் என்ற சாதனையை படைத்திருந்தார். இதன் பின்னர் அவர், 2006 -ம் ஆண்டு ஜாக்ரெப்பில் நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப்பில் தங்கம் வென்று அசத்தி இருந்தார்.
நீரஜ் சோப்ரா இந்த சீசனில் இரண்டு உயர்தரப் போட்டிகளில் மட்டுமே பங்கேற்றார். அவை இரண்டிலும் தங்கம் வென்றிருந்தார். தோஹா மற்றும் லாசனே நகரில் நடைபெற்ற டைமண்ட் லீக்கில் அசத்திய அவர், அதன் பின்னர் இரு மாத இடைவெளிக்கு பின்னர் தற்போது முழுவீச்சில் உலக தடகள சாம்பியன்ஷிப் தொடருக்கு தயாராகி உள்ளார்.
நீரஜ் சோப்ரா கூறும்போது, “உலகின் சிறந்த விளையாட்டு வீரர்களுக்கு எதிராக மிக உயர்ந்த மட்டத்தில் போட்டியிடுவது மற்றும் நிலையான செயல் திறனை வெளிப்படுத்துவது நிச்சயமாக சவாலானதுதான். நான் எனது சிறந்ததைக் கொடுக்க விரும்புகிறேன், அது நடந்தால், நான் முன்பை விட நன்றாக வருவேன்” என்றார்.
உலக தடகள சாம்பியன்ஷிப்பில் நீரஜ் சோப்ராவுக்கு நடப்பு சாம்பியன் ஆண்டர்சன் பீட்டர்ஸ், செக்குடியரசின் ஜேக்கப் வட்லெஜ்ச், ஜெர்மனியின் ஜூலியன் வெபர் ஆகியோர் சவால் அளிக்கக்கூடும் என கருதப்படுகிறது. இதில் ஜேக்கப் வட்லெஜ் டோக்கியோ ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கமும், 2022-ம் ஆண்டு உலக சாம்பியன்ஷிப்பில் வெண்கலப் பதக்கமும் கைப்பற்றி இருந்தார்.
நீரஜ் சோப்ராவுடன் மற்ற இந்திய வீரர்களான டி.பி.மானு, கிஷோர் ஜெனாவும் உலக தடகள சாம்பியன்ஷிப்பில் கலந்துகொள்கின்றனர். நீளம் தாண்டுதலில் இந்தியாவின் ஜெஸ்வின் ஆல்ட்ரின், முரளி ஸ்ரீசங்கர் ஆகியோர் கலந்துகொள்கின்றனர். இதில் ஜெஸ்வின் ஆல்ட்ரினின் சிறப்பான செயல் திறன் 8.42 மீட்டராகவும், முரளி சங்கரின் செயல் திறன் 8.41 மீட்டராகவும் உள்ளது. இதனால் இவர்கள் பதக்கம் வெல்ல வாய்ப்பு உள்ளது.
ஆடவருக்கான 3 ஆயிரம் மீட்டர் ஸ்டீப்பிள்சேஸில், தேசிய சாதனை படைத்துள்ள இந்தியாவின் அவினாஷ் சாப்ளே களமிறங்குகிறார். 20 கிலோ மீட்டர் நடை பந்தயத்தில் இந்தியா சார்பில் ஆகாஷ்தீப் சிங், விகாஷ் சிங், பரம்ஜீத் சிங் பங்கேற்கின்றனர்.
தொடக்க நாளான இன்று மகளிருக்கான நீளம் தாண்டுதலில் ஷைலி சிங், ஆடவருக்கான 1,500 மீட்டர் ஓட்டத்தில் அஜய் குமார் சரோஜ், டிரிப்பிள் ஜம்ப்பில் பிரவீன் சித்ரவேல், அப்துல்லா அபுபக்கர், எல்தோஷ் பால் ஆகியோர் களமிறங்குகின்றனர்.