விளையாட்டு

அயர்லாந்துக்கு எதிரான முதல் டி20 கிரிக்கெட் போட்டி - இந்திய அணி வெற்றி

செய்திப்பிரிவு

டப்ளின்: அயர்லாந்து அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி வெற்றிபெற்றுள்ளது. டக்வொர்த் முறைப்படி இந்தியா இரண்டு ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது.

முதலில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி பேட்டிங் செய்த அயர்லாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்களை இழந்து 139 ரன்களை சேர்த்தது. அந்த அணியின் துவக்க வீரர்கள் ஆன்டி பால்பிர்னி மற்றும் பால் ஸ்டிர்லிங் முறையே 4 மற்றும் 11 ரன்களில் ஆட்டமிழக்க, லோர்கன் டக்கர் ரன் ஏதும் எடுக்காமல் அவுட் ஆனார்.

பின்னர் ஹாரி டெக்டர் 9 ரன்களில் அவுட் ஆனாலும், கர்டிஸ் கேம்ஃபர் 33 பந்துகளில் 39 ரன்களும், பேரி மெக்கார்தி 33 பந்துகளில் 51 ரன்களும் விளாச 139 ரன்களை சேர்த்தது. இந்தியா சார்பில் அதிகபட்சமாக ஜஸ்பிரித் பும்ரா, ப்ரஷித் கிருஷ்ணா மற்றும் ரவி பிஷ்னோய் தலா இரண்டு விக்கெட்களை வீழ்த்தினர்.

இதன்பின் 140 ரன்கள் இலக்கை இந்திய அணி துரத்தியது. ஓப்பனிங் வீரர் ஜெய்ஸ்வால் 24 ரன்களில் அவுட் ஆனார். மறுமுனையில் ருதுராஜ் கெய்க்வாட் 19 ரன்கள் எடுத்திருந்த நிலையில் திலக் வர்மா ரன்கள் ஏதும் எடுக்காமல் அவுட் ஆனார். அப்போது மழை குறுக்கிட ஆட்டம் தடைபட்டது. இதன்பின் டக்வொர்த் லீவிஸ் முறைப்படி இந்திய அணி இரண்டு ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது.

SCROLL FOR NEXT