கடந்த 2008-ல் இதே நாளில் சர்வதேச கிரிக்கெட் அரங்கில் விராட் கோலி அறிமுக வீரராக களம் கண்டார். இந்திய கிரிக்கெட்டை மறுவரையறை செய்யும் ஒரு சகாப்தத்தின் தொடக்கம் அது என யாரும் அப்போது அறிந்திருக்க வாய்ப்பில்லை.
34 வயதான கோலி, இந்திய அணிக்காக 501 சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி 25,582 ரன்கள் குவித்துள்ளார். 76 சதங்கள் இதில் அடங்கும். அவர் தலைமையிலான இந்திய அணி புதுப்பொலிவை பெற்றது. இந்த 15 ஆண்டுகால சர்வதேச கிரிக்கெட் கேரியரில் விக்கெட்களுக்கு இடையில் சுமார் 500 கிலோ மீட்டர் தூரம் ஓட்டம் எடுத்து அணிக்கு உதவியுள்ளார். அதில் 276.57 கி.மீ தூரம் அவரது கணக்கில் எடுக்கப்பட்ட ரன்கள். இதர கி.மீ தூரம் சக வீரருக்காக அவர் எடுத்த ஓட்டம் என்கிறது கிரிக்கெட் சார்ந்த தரவுகள்.
46 மைதானங்களில் சதம் பதிவு செய்துள்ளார்: கோலி, இதுவரை 83 மைதானங்களில் சர்வதேச போட்டிகளில் விளையாடி உள்ளார். அதில் 46 மைதானங்களில் அவர் சதம் பதிவு செய்துள்ளார். இதில் ஆஸ்திரேலியாவில் அடிலெய்ட் மைதானத்தில் 5 சதங்களை பதிவு செய்துள்ளார். தனது முதல் உலகக் கோப்பை தொடரில் சிறப்பான தொடக்கத்தை கொடுத்த வீரராகவும் கோலி திகழ்கிறார். 2011 உலகக் கோப்பையில் வங்கதேச அணிக்கு எதிராக சதம், 2012 டி20 உலகக் கோப்பையில் ஆப்கானிதான் அணிக்கு எதிராக அரை சதமும் பதிவு செய்துள்ளார்.
சேஸ் மாஸ்டர்: ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் எதிரணி நிர்ணயித்த இலக்கை விரட்டி பிடிப்பது விராட் கோலிக்கு மிகவும் பிடிக்கும். அந்த வகையில் ஒருநாள் கிரிக்கெட்டில் 26 முறை இலக்கை துரத்தியபோது சதம் பதிவு செய்துள்ளார். 300+ ரன்கள் சேஸில் 9 முறை சதம் பதிவு செய்துள்ளார்.
2008-ல் அறிமுகம்: கடந்த 2008-ல் இதே நாளில் சர்வதேச கிரிக்கெட்டில் கோலி அறிமுகமானார். அப்போது அவருக்கு வயது 19 ஆண்டுகள் 287 நாட்கள். இந்திய அணியின் தொடக்க வீரராக இலங்கை அணிக்கு எதிரான தொடரில் கோலி விளையாடினார். முதல் போட்டியில் 12 ரன்களில் ஆட்டமிழந்தார். முதல் அரை சதத்தை 4-வது போட்டியில் பதிவு செய்தார். 2009 டிசம்பரில் தனது முதல் சதத்தை பதிவு செய்தார். கிரிக்கெட் உலகில் பல சாதனைகளை படைத்துள்ளார். வரும் நாட்களில் மேலும் பல சாதனைகளை கோலி படைக்க உள்ளார்.