கோப்புப்படம் 
விளையாட்டு

புச்சிபாபு கிரிக்கெட் தொடர்: கேரளாவை வீழ்த்தியது டிஎன்சிஏ லெவன் அணி

செய்திப்பிரிவு

திருநெல்வேலி: புச்சிபாபு கிரிக்கெட் தொடரில் கேரளா அணியை 10 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது டிஎன்சிஏ லெவன் அணி.

திருநெல்வேலியில் உள்ள சங்கர் நகர் ஐசிஎல் மைதானத்தில் நடைபெற்று வந்த இந்த போட்டியில் கேரளா முதல் இன்னிங்ஸில் 218 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. தொடர்ந்து விளையாடிய டிஎன்சிஏ லெவன் முதல் இன்னிங்ஸில் 107.2 ஓவர்களில் 358 ரன்கள் குவித்து ஆட்டம் இழந்தது.

அதிகபட்சமாக நிதிஷ் எஸ்.ராஜகோபால் 90, கே.டி.ஏ.மாதவ பிரசாத் 72, எம்.ஷாருக்கான் 60 ரன்கள் சேர்த்தனர். தொடர்ந்து விளையாடிய கேரளா அணி நேற்றைய 3-வது நாள் ஆட்டத்தில் 59.3 ஓவர்களில் 178 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. அதிகபட்சமாக சச்சின் பேபி 56 ரன்கள் சேர்த்தார். டிஎன்சிஏ லெவன் சார்பில் பந்து வீச்சில் ஜாதவேத் சுப்ரமணியன் 4 விக்கெட்கள் வீழ்த்தினார்.

38 ரன்கள் இலக்குடன் பேட் செய்த டிஎன்சிஏ லெவன் 7.5 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 39 ரன்கள் எடுத்து 10 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் டிஎன்சிஏ லெவன் அணிக்கு 7 புள்ளிகள் கிடைத்தது. ஆட்ட நாயகனாக நிதிஷ் எஸ்.ராஜகோபால் தேர்வானார்.

SCROLL FOR NEXT