மும்பை: கடந்த 2019 ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை தொடரில் விராட் கோலி 4-வது இடத்தில் பேட் செய்ய வேண்டுமென தான் விரும்பியதாக தெரிவித்துள்ளார் இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி.
கடந்த சில ஆண்டுகளாகவே இந்திய கிரிக்கெட் அணியின் பேட்டிங் ஆர்டரில் களம் காணும் நான்காவது வீரர் யார் என்ற குழப்பம் நிலவி வருகிறது. அந்த இடத்தில் பல வீரர்கள் பேட் செய்ய வைத்து, அணி நிர்வாகம் சோதனை மேற்கொண்டுள்ளது. ஆனால், அதில் சிலர் மட்டுமே கச்சிதமாக பொருந்துகிறார்கள். அவர்களும் காயம், ஃபார்ம்-அவுட் போன்ற காரணங்களால் ஆடும் லெவனில் விளையாடும் வாய்ப்பை இழக்கின்றனர். இந்தச் சூழலில் ரவி சாஸ்திரி இதனை தெரிவித்துள்ளார்.
“அணிக்கு தேவை என்றால் பேட்டிங் ஆர்டரில் 4-வது இடத்தில் களமிறங்கி, பேட் செய்ய கோலி தயாராக இருப்பார் என்பதை நான் அறிவேன். அது குறித்து நான் 2019 ஒருநாள் உலகக் கோப்பை தொடரின்போதே ஆலோசித்துள்ளேன். அதோடு நிற்காமல் தேர்வுக் குழு தலைவரிடமும் அது குறித்து பேசி இருந்தேன்.
நமது அணியில் முதல் 2 அல்லது 3 விக்கெட்களை இழந்தால் அவ்வளவுதான். அதை கடந்த காலங்களில் நாம் எதிர்கொண்டுள்ளோம். அதே நேரத்தில் விராட் கோலியின் சாதனையை பாருங்கள். அவர் 4-வது இடத்தில் பேட் செய்யலாம் என்பதற்கு அதுவே சான்று. அணியின் டாப் 4 பேட்ஸ்மேன்கள் அசாத்திய திறன் படைத்தவர்களாக இருப்பது அணிக்கு வலு சேர்க்கும்” என அவர் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் வரும் அக்டோபர் மாதம் ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் தொடங்க உள்ளது. ஒருநாள் கிரிக்கெட் ஃபார்மெட்டை பொறுத்தவரையில் அதற்கு முன்னதாக ஆசிய கிரிக்கெட் கோப்பை மற்றும் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடரில் இந்தியா விளையாட உள்ளது.