தோனி | கோப்புப்படம் 
விளையாட்டு

மறக்குமா நெஞ்சம் | சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து தோனி ஓய்வு பெற்று 3 ஆண்டுகள் நிறைவு

செய்திப்பிரிவு

சென்னை: கடந்த 2020-ம் ஆண்டு இதே நாளில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி அறிவித்திருந்தார். தற்போது ஐபிஎல் கிரிக்கெட்டில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை அவர் வழிநடத்தி வருகிறார்.

2004 முதல் 2019 வரையில் இந்திய அணிக்காக சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் தோனி விளையாடி உள்ளார். டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட் என 538 சர்வதேச போட்டிகளில் தேசத்துக்காக விளையாடி 17,266 ரன்கள் எடுத்தவர் தோனி. கிரிக்கெட் உலகின் மகத்தான கேப்டன், விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் மற்றும் ஃபினிஷர் என போற்றப்படுகிறார். அவரது தலைமையிலான இந்திய அணி 2007 ஐசிசி டி20 உலகக் கோப்பை, 2011 ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை மற்றும் 2013 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியை வென்றுள்ளது.

ஓய்வு அறிவிப்பு: 2019 ஒருநாள் உலகக் கோப்பை தொடரில் நியூசிலாந்து அணிக்கு எதிராக இந்திய அணி விளையாடிய அரை இறுதிப் போட்டி தான் தோனி கடைசியாக விளையாடிய சர்வதேச கிரிக்கெட் போட்டி. அந்தப் போட்டியில் 50 ரன்கள் எடுத்து ரன் அவுட் ஆனார். இந்திய அணி அரை இறுதியோடு அந்த தொடரில் இருந்து வெளியேறியது. அதன்பிறகு ஓய்வு குறித்த எந்த அறிவிப்பையும் தோனி சொல்லாமல் இருந்தார். அந்த சூழலில் தான் கடந்த 2020-ல் ஆகஸ்ட் 15-ம் தேதி சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். அது ரசிகர்கள் மற்றும் கிரிக்கெட் வல்லுனர்களுக்கு சர்ப்ரைஸ் அறிவிப்பாக இருந்தது.

“உங்கள் அன்புக்கும், ஆதரவுக்கும் நன்றி. 19.29 மணி முதல் நான் ஓய்வு பெற்றுவிட்டதாக கருத்தில் கொள்ளுங்கள்” என இன்ஸ்டாகிராம் பதிவின் வழியே தனது ஓய்வு முடிவை தோனி அறிவித்திருந்தார். இருந்தாலும் ஐபிஎல் கிரிக்கெட்டில் தோனி தொடர்ந்து விளையாடி வருகிறார். அவரிடம் ஐபிஎல் ஓய்வு குறித்து கேட்கும் போதெல்லாம் இந்த முறை அல்ல என தெரிவித்து வருகிறார். அவர் விளையாடும் கடைசி கிரிக்கெட் போட்டி சென்னை மண்ணில் தான் அரங்கேறும் என அவரே தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT