சென்னை: இந்தியா சிமெண்ட்ஸ் புரோ சாம்பியன்ஷிப் கோல்ஃப் போட்டி சென்னையில் நாளை (16ம் தேதி) தொடங்குகிறது. இந்தியாவில் தொழில்முறை கோல்ஃப் போட்டிகளுக்கு அனுமதியும் அங்கீகாரமும் வழங்கும் அதிகாரப்பூர்வ அமைப்பான புரொஃபஷனல் கோல்ஃப் டூர் ஆஃப் இந்தியா (பிஜிடிஐ) அமைப்பின் ஆதரவுடன் இந்த போட்டி நடைபெறுகிறது.
வரும் 19-ம் தேதி வரை சென்னையில் உள்ள தமிழ்நாடு கோல்ஃப் ஃபெடரேஷனின் காஸ்மோ கோல்ஃப் கோர்ஸ் மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியின் மொத்த பரிசுத் தொகை ரூ.50 லட்சம் ஆகும்.
இப்போட்டியில் 123 தொழில்முறை விளையாட்டு வீரர்கள் மற்றும் மூன்று அமெச்சூர்கள் வீரர்கள் கலந்துகொள்கின்றனர். டாடா ஸ்டீல் பிஜிடிஐ தரவரிசையில் முதலிடம் வகிக்கும் ஓம் பிரகாஷ் சவுஹான், அமன் ராஜ், யுவராஜ் சிங் சாந்து, கரன் பிரதாப் சிங், சச்சின் பைசோயா, கவுரவ் பிரதாப் சிங் உள்ளிட்ட முன்னணி வீரர்கள் பங்கேற்கின்றனர்.
அதேவேளையில் வெளிநாடுகளிலிருந்து வங்கதேசத்தை சேர்ந்த ஜமால் உசைன், படால் உசைன் மற்றும் இலங்கையைச் சேர்ந்த என். தங்கராஜ், மிதுன் பெரேரா, ஜப்பான் நாட்டின் மகோடோ, நேபாளத்தைச் சேர்ந்த சுக்ரா பகதூர் ராய் உள்ளிட்டோரும் கலந்துகொள்கின்றனர். உள்ளூரைச் சேர்ந்த போட்டியாளர்களில் சென்னையை தளமாக கொண்டு இயங்கும் தொழில்முறை கோல்ஃப் வீரர்களுள் சி.அருள் முதன்மை வீரராக திகழ்கிறார்.
இந்த போட்டிக்கான அறிவிப்புநிகழ்ச்சி சென்னையில் நேற்று நடைபெற்றது. இதில் பிஜிடிஐ – ன் தலைமை செயல் அலுவலர் உத்தம் சிங் முண்டி, இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் துணை தலைவர்,நிர்வாக இயக்குனர் என். னிவாசன், இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் தலைமை சந்தையாக்கல் அதிகாரி பார்த்தசாரதி ராமானுஜம், பிஸ்லேரி நிறுவனத்தின் சந்தையாக்கல் துறை தலைவர்துஷார் மல்ஹோத்ரா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.