விளையாட்டு

ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி | பட்டம் வென்ற இந்திய அணிக்கு ரூ.1.10 கோடி பரிசு - முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

செய்திப்பிரிவு

சென்னை: ஆசிய ஆடவர் ஹாக்கி கோப்பையை வென்ற இந்திய அணிக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் ரூ.1.10 கோடி பரிசுத் தொகை வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கியில் பட்டம் வென்று அசத்தியுள்ளது இந்திய அணி. மலேசியாவை 4 - 3 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது. சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தின் முதல் காலிறுதியில் ஜுக்ராஜ் சிங் கோலடித்து இந்தியாவை ஆரம்பத்திலேயே முன்னிலைப்படுத்தினார்.

ஒருகட்டத்தில் 3 - 1 என்ற கோல் கணக்கில் பின்தங்கியிருந்த இந்திய அணி கடைசி 17 நிமிடங்களில் 3 கோல்கள் அடித்து அசத்தலான வெற்றியை பதிவு செய்தது. இந்தியாவின் ஹர்மன்பிரீத் சிங், குர்ஜந்த், ஆகாஷ்தீப் சிங் ஆகியோர் கோல் அடித்து இந்திய அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றனர். இந்த வெற்றியின் மூலம், நான்காவது முறையாக ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி பட்டத்தை வென்றது. இந்திய அணியின் வெற்றிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

வெற்றிபெற்ற இந்திய அணிக்கு கோப்பையை வழங்கி, இந்திய அணி வீரர்களுக்கு தங்கப் பதக்கங்களை அணிவித்து முதல்வர் ஸ்டாலின் வாழ்த்தினார். மேலும், வெற்றி பெற்ற இந்திய அணி வீரர்களுக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் தலா 5 லட்சம் ரூபாயும், பயிற்சியாளர்கள் மற்றும் இதர பணியாளர்களுக்கு தலா 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயும் என மொத்தம் 1 கோடியே 10 லட்சம் ரூபாய் பரிசுத் தொகை வழங்கப்படும் என்றும் முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.

SCROLL FOR NEXT