விளையாட்டு

உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் | சாட்விக்-ஷிராக் ஜோடி, சிந்துவுக்கு முதல் சுற்றில் பை

செய்திப்பிரிவு

கோலாலம்பூர்: உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடரில் ஒலிம்பிக்கில் இரு முறை பதக்கம் வென்ற இந்தியாவின் பி.வி.சிந்து, ஆடவர் இரட்டையர் பிரிவில் உலகத் தரவரிசையில் 2-வது இடம் வகிக்கும் சாட்விக்சாய்ராஜ் ராங்கிரெட்டி, ஷிராக் ஷெட்டி ஜோடி ஆகியோருக்கு முதல் சுற்றில் பை வழங்கப்பட்டுள்ளது.

உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடர் வரும் 21-ம் தேதி முதல் 27-ம் தேதி வரை டென்மார்க்கின் கோபன்ஹேகன் நகரில் நடைபெறுகிறது. இந்த தொடருக்கான டிரா நேற்று வெளியிடப்பட்டது. இதில் மகளிர் ஒற்றையர் பிரிவில் 2019-ம் ஆண்டு சாம்பியன் பட்டம் வென்ற இந்தியாவின் பி.வி.சிந்துவுக்கு முதல் சுற்றில் பை வழங்கப்பட்டுள்ளது. இதனால் அவர், 2-வது சுற்றில் நேரடியாக களமிறங்குவார். எனினும் சிந்துவுக்கு இந்த தொடர் கடும் சவால் நிறைந்ததாகவே இருக்கும். எனில் அவர், தாய்லாந்தின் ரட்சனோக் இன்டனான், தரவரிசையில் முதலிடத்தில் உள்ள கொரியாவின் அன் சே யங் உள்ளிட்டோரை அடுத்தடுத்த சுற்றுகளில் சந்திக்க நேரிடும். இந்த தொடரில் மகளிர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவில் இருந்து சிந்து மட்டுமே கலந்துகொள்கிறார்.

ஆடவர் இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் சாட்விக்சாய்ராஜ் ராங்கி ரெட்டி, ஷிராக் ஷெட்டி ஜோடிக்கு பை வழங்கப்பட்டுள்ளது. இதனால் இந்த ஜோடி 2-வது சுற்றில் நேரடியாக கலந்துகொள்ளும். ஆடவர் ஒற்றையர் பிரிவில் உலகத் தரவரிசையில் 9-வது இடத்தில் உள்ள இந்தியாவின் ஹெச்.எஸ்.பிரனோய் தனது முதல் சுற்றில் பின்லாந்தின் கல்லே கோல்ஜோனெனுடன் மோதுகிறார். மற்ற இந்திய வீரர்களான லக் ஷயா சென், மொரிஷியஸின் ஜார்ஜ் ஜூலியன் பாலுடனும் கிடாம்பி ஸ்ரீகாந்த், ஜப்பானின் கென்டா நிஷிமோடாவுடனும் மோதுகின்றனர். மகளிர் இரட்டையர் பிரிவில் இந்தியா சார்பில் ட்ரீசா ஜாலி, காயத்ரி கோபிசந்த் ஜோடியும் அஷ்வின் பாத், ஷிகா கவுதம் ஜோடியும் களமிறங்குகிறது. இதில் ட்ரீசா, காயத்ரி ஜோடிக்கு முதல் சுற்றில் பை வழங்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT