சூர்யகுமார் யாதவ் 
விளையாட்டு

“எனது ஒருநாள் கிரிக்கெட் செயல்பாடு மிகவும் மோசம்தான்” - ஒப்புக்கொண்ட சூர்யகுமார் யாதவ்

செய்திப்பிரிவு

கயானா: தனது ஒருநாள் கிரிக்கெட் செயல்பாடு மிகவும் மோசம் என ஏற்றுக்கொள்வதில் தான் அவமானம் கொள்ளவில்லை என இந்திய கிரிக்கெட் அணியின் பேட்ஸ்மேன் சூர்யகுமார் யாதவ் தெரிவித்துள்ளார்.

ஐசிசி சர்வதேச டி20 கிரிக்கெட் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில் முதலிடத்தில் இருப்பவர் சூர்யகுமார் யாதவ். அன்-ஆர்த்தடாக்ஸ் முறையில் மைதானத்தின் அனைத்து பக்கமும் பந்தை விரட்டும் திறன் படைத்த 360 டிகிரி பேட்ஸ்மேன். அதை நிரூபிக்கும் விதமாக மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் 44 பந்துகளில் 83 ரன்கள் எடுத்திருந்தார். 10 பவுண்டரி மற்றும் நான்கு சிக்ஸர்கள் இதில் அடங்கும். இந்தப் போட்டியில் அணியை வெற்றி பெற செய்த அவரது ஆட்டத்துக்கு ஆட்ட நாயகன் விருது கொடுக்கப்பட்டது. இந்தச் சூழலில் அவர் தெரிவித்தது:

“நேர்மையாக சொல்ல வேண்டுமென்றால் எனது ஒருநாள் கிரிக்கெட் செயல்பாடு முற்றிலும் மோசம். அதை ஒப்புக்கொள்வதில் அவமானமில்லை. ஆனால், ஆட்டத்தை இதிலிருந்து எப்படி மேம்படுத்துகிறோம் என்பதே முக்கியம். கேப்டன் ரோகித் சர்மா மற்றும் ராகுல் திராவிட் உடன் நான் பேசினேன். நான் இந்த ஃபார்மெட்டில் அதிகம் விளையாடாததுதான் காரணம் என தெரிவித்தனர். அதனால், அதில் நான் அதிகம் விளையாடவும், அது குறித்து யோசிக்க வேண்டும் என்றும் தெரிவித்தனர்.

குறிப்பாக கடைசி 10 அல்லது 15 ஓவர்களில் நான் பேட் செய்ய வேண்டி இருந்தால் என்னால் அணிக்கு என்ன பங்களிப்பு தர முடியும் என்பது குறித்து ஆலோசிக்க சொல்லியுள்ளார். 45 முதல் 50 பந்துகள் வரை விளையாடினாலும் எனது இயல்பான ஆட்டத்தை விளையாட சொல்லி உள்ளார்கள். இந்தப் பொறுப்பை எப்படி ஒரு வாய்ப்பாக மாற்றுவது என்பது இப்போது எனது கையில் உள்ளது” என சூர்யகுமார் யாதவ் தெரிவித்துள்ளார்.

இதுவரை 26 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் சூர்யகுமார் யாதவ் விளையாடி உள்ளார். மொத்தம் 511 ரன்கள் எடுத்துள்ளார். இதில் இரண்டு அரை சதம் அடங்கும். மறுபக்கம் 49 டி20 போட்டிகளில் 1,780 ரன்கள் குவித்துள்ளார்.

SCROLL FOR NEXT