மணிகா பத்ரா 
விளையாட்டு

விமானத்தில் பையை தவறவிட்ட மணிகா பத்ரா

செய்திப்பிரிவு

புதுடெல்லி: பெருவிலிருந்து இந்தியா திரும்பும்போது தனது உடைமைகள் அடங்கிய பையை விமானத்தில் தவறவிட்டுவிட்டதாகவும், அதை மீட்டுத்தரவேண்டும் என்று மத்திய அரசுக்கு இந்திய டேபிள் டென்னிஸ் வீராங்கனை மணிகா பத்ரா கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்திய டேபிள் டென்னிஸ் நட்சத்திர வீராங்கனையான மணிகா பத்ரா, அண்மையில் பெருநாட்டில் நடைபெற்ற டேபிள் டென்னிஸ் போட்டியில் பங்கேற்கச் சென்றிருந்தார். போட்டியை முடித்துவிட்டு அவர் தாய்நாட்டுக்கு கேஎல்எம் ஏர்லைன்ஸ் விமானத்தில் திரும்பினார்.

அப்போது விமான நிலையத்தில் தனது உடைமைகள் அடங்கிய பையைத் தவறவிட்டுவிட்டார். இதையடுத்து தனது உடைமைகள் அடங்கிய பையை மீட்டுத் தருமாறு மத்திய விமானப் போக்குவரத்துத்துறை அமைச்சர் ஜோதிர் ஆதித்ய சிந்தியாவுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார் மணிகா பத்ரா. இதுகுறித்து அவர் கூறியதாவது:

அண்மையில் பெரு நாட்டு போட்டியில் பங்கேற்றுவிட்டு தாயகம் திரும்புவதற்காக கேஎல்எம் ஏர்லைன்ஸ் விமானத்தின் பிஸினஸ் வகுப்பில் பயணம் செய்தேன். இந்த விமான பயணத்தின் போது எனது உடைமைகள், விளையாட்டுக் கருவிகள் அடங்கிய பையைத் தவறவிட்டு விட்டேன். இது எனக்கு மிகப்பெரிய ஏமாற்றமாக இருந்தது.

இதுதொடர்பாக விமான நிலையத்தில் புகார் செய்தபோது அங்கிருந்த அதிகாரிகளிடம் பதில் இல்லை. எனது பை எங்கேபோனது என்றும் தெரியவில்லை. எனவே, எனது உடைமைகளை மத்திய விமானப் போக்குவரத்துத்துறை அமைச்சர் ஜோதிர் ஆதித்ய சிந்தியா மீட்டுத் தர நடவடிக்கை எடுக்கவேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

ஆகஸ்ட் 6, 7-ம் தேதிகளில் மணிகா பத்ரா பயணம் செய்துள்ளார். இதுதொடர்பாக மத்திய அமைச்சர் ஜோதிர் ஆதித்ய சிந்தியாவுக்கு ட்விட்டரிலும் அவர், வேண்டுகோள் விடுத்துள்ளார்.

SCROLL FOR NEXT