விளையாட்டு

ஜெர்மனியை பழிதீர்க்குமா பிரான்ஸ்?

செய்திப்பிரிவு

பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் இன்று நடைபெறும் உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் முதல் காலிறுதி ஆட்டத்தில் ஐரோப்பாவின் பலம் வாய்ந்த அணிகளான ஜெர்மனியும் பிரான்ஸும் மோதுகின்றன.

கடந்த 1982, 1986 உலகக் கோப்பை போட்டியின் அரையிறுதியில் ஜெர்மனியிடம் கண்ட தோல்விக்கு பதிலடி கொடுக்கும் முனைப்பில் பிரான்ஸ் களமிறங்குகிறது.

குரூப் சுற்றில் ஜெர்மனி சவாலான பிரிவில் இடம்பெற்றிருந்தபோதும் 4-0 என்ற கோல் கணக்கில் போர்ச்சுகலை வீழ்த்தியது. 2-வது ஆட்டத்தில் 2-2 என்ற கோல் கணக்கில் கானாவுடன் டிரா செய்த ஜெர்மனி, கடைசி லீக் ஆட்டத்தில் 1-0 என்ற கணக்கில் அமெரிக்காவை வீழ்த்தி அந்த பிரிவில் முதலிடத்தைப் பிடித்தது. காலிறுதிக்கு முந்தைய சுற்றில் கூடுதல் நேரம் வரை போராடிய ஜெர்மனி 2-1 என்ற கோல் கணக்கில் அல்ஜீரியாவை வீழ்த்தி காலிறுதிக்கு வந்திருக்கிறது.

‘இ’ பிரிவில் இடம்பெற்றிருந்த பிரான்ஸ் அணி 3-0 என்ற கோல் கணக்கில் ஹோண்டுராஸையும், 5-2 என்ற கோல் கணக்கில் சுவிட்சர்லாந்தையும் வீழ்த்தியதோடு, கடைசி ஆட்டத்தில் ஈகுவடாருடன் கோலின்றி டிரா செய்து முதலிடத்தைப் பிடித்தது. நாக் அவுட் சுற்றின் முதல் ஆட்டத்தில் (காலிறுதிக்கு முந்தைய சுற்று) 2-0 என்ற கோல் கணக்கில் நைஜீரியாவை தோற்கடித்து காலிறுதியை உறுதி செய்துள்ள பிரான்ஸ் அணியும் கூடுதல் நேரத்தில்தான் வெற்றி கண்டது.

நெருக்கடியில் ஜெர்மனி

முதல் ஆட்டத்தில் போர்ச்சுகலுக்கு எதிராக அபார வெற்றியோடு தொடங்கிய ஜெர்மனியின் ஆட்டம் அதன்பிறகு பெரிய அளவில் சிறப்பாக அமையவில்லை. அதனால் ஜெர்மனி கடும் விமர்சனத்துக்குள்ளா கியிருக்கிறது. ஆலிவர் கான் உள்ளிட்ட முன்னாள் ஜெர்மனி கேப்டன்கள், ‘ஜெர்மனி வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினால் மட்டுமே பிரான்ஸை வெல்ல முடியும். எனவே ஜெர்மனி வீரர்களின் ஆட்டத்திறனில் முன்னேற்றம் தேவை’ என வலியுறுத்தியுள்ளனர்.

தாமஸ் முல்லர்

கடும் நெருக்கடிக்கு மத்தியில் களமிறங்கும் ஜெர்மனி கோலடிப்பதில் தாமஸ் முல்லரையே நம்பியிருக்கிறது. கடந்த உலகக் கோப்பையில் தங்க ஷூ விருதை வென்ற முல்லர், இந்த முறை ஹாட்ரிக் உள்பட 4 கோல்களை அடித்துள்ளார். மிட்பீல்டில் மெசூத் ஒஸில், மரியோ கோட்ஸே, குரூஸ், கேதிரா ஆகியோரும், பின்களத்தில் ஸ்வெய்ன்ஸ்டீகர், போட்டங், ஹம்மல்ஸ், கேப்டன் பிலிப் லாம், மெர்ட்டேசாக்கர் ஆகியோரும் இடம்பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

கலக்கும் பென்ஸீமா

பிரான்ஸ் அணியைப் பொறுத்தவரையில் அதன் ஸ்டிரைக்கர் கரிம் பென்ஸீமா, குரூப் சுற்றின் முதல் இரு ஆட்டங்களில் அபாரமாக ஆடி கோலடித்தார். இதுவரை 3 கோல்கள் அடித்துள்ள அவர் இந்தப் போட்டியிலும் கலக்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. பிரான்ஸ் அணியில் பென்ஸீமா, கிரீஸ்மான், வால்புனா, போக்பா, மேட்டியூடி, எவரா, கேபாயி, சாகோ, வெரானே, சாக்னா, லோரிஸ் (கோல் கீப்பர்) ஆகியோர் ஆடும் லெவனில் இடம்பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை நடைபெற்ற ஆட்டங்கள் அனைத்திலும் 2-வது பாதியில் பிரான்ஸ் அணி அபாரமாக ஆடியுள்ளது. எனவே ஜெர்மனிக்கு கடும் சவால் காத்திருக்கிறது.

SCROLL FOR NEXT