பாண்டியா மற்றும் திராவிட் | கோப்புப்படம் 
விளையாட்டு

WI vs IND: முதல் டி20 போட்டியில் தோல்வி | ஹர்திக் பாண்டியா, திராவிட் மீது எழும் விமர்சனங்கள்!

ஆர்.முத்துக்குமார்

என்னதான் நடக்கிறது? பிரச்சினை வெறும் அணி தேர்வு, மோசமான கேப்டன்சி மட்டுமா? அல்லது பிரச்சினை அமைப்பு ரீதியானதா என்பதை ஆராய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இளம் வீரர்கள் கொண்ட இந்திய அணியை மே.இ.தீவுகளின் வேகப்பந்து வீச்சு அடக்கி ஆண்டது. அதுவும் குறிப்பாக பந்தின் வேகத்தைக் கூட்டியும், குறைத்தும் அவர்கள் வீசி இந்திய இளம் அணியை கபளீகரம் செய்ததுதான் நடந்தது. தோற்ற இரு போட்டிகளிலும் ஹர்திக் பாண்டியாவின் கேப்டன்சி குஜராத் டைட்டன்ஸ் அணியை தாண்டி சர்வதேச தரத்திற்கு உயர வேண்டிய நிர்பந்தம் இருப்பதை சுட்டிக் காட்டியது. ராகுல் திராவிட் ஏகப்பட்ட செலக்‌ஷன் குழப்படிகளை செய்து வருகிறார்.

ஜெய்ஸ்வால் டெஸ்ட் போட்டிக்கான திறமைகளைக் கொண்டவர் என்பதன் கீற்று தெரிந்துள்ளது. ஆனால், அதில் இன்னும் அவர் பல சோதனைகளைக் கடக்க வேண்டியுள்ளது. ஆனால், டி20 ஓப்பனராக ஜெய்ஸ்வால் இஷான் கிஷனை விடவும் ஷுப்மன் கில்லையும் விட திறமையானவரே. ஏன் அவருக்கு டி20 வாய்ப்புக் கொடுக்கப்படவில்லை. கேட்டால், ‘இப்போதுதான் அவர் ஒரு டெஸ்ட் வீரராக முதிர்ச்சி அடைந்துள்ளனர், அதற்குள் டி20-யில் அவரை நுழைத்து மாசுப்படுத்த வேண்டாம்’ என்ற பதில் வரும். அப்படியென்றால் அவரை ஏன் ஐபிஎல் ஆடுவதிலிருந்து தடுக்க முடியவில்லை என்ற கேள்விக்கு பதில் கிடையாது.

முதல் டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 149 ரன்களை எடுத்திருக்காது. சஹல் ஒரு ஓவரில் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றியும் அவருக்கு உடனடியாக 2 வது ஓவரைக் கொடுக்காமல் பின்னால் கொண்டு வந்தார். இந்தத் தவறுக்கு ஹர்திக் பாண்டியாவின் பதில் என்னவாக இருக்கும்? இந்திய வெள்ளைப்பந்து கிரிக்கெட்டின் எதிர்காலம் ஹர்திக் பாண்டியாவின் தலைமைதான் என்றால் நிச்சயம் அதற்கு ராகுல் திராவிட் பயிற்சியாளராகத் தேறமாட்டார் என்றே கூற வேண்டியுள்ளது. இது மட்டுமல்ல, கலீல் அகமது இப்போது முன்னேறிய ஒரு இடது கை பவுலராகத் திகழ்கிறார். அவர் ஐபிஎல் போட்டிகளில் ரோஹித் சர்மாவை ஆட்டிப்படைத்தது இன்னும் நம் கண்களில் இருக்கிறது. ஆனால் தேர்வுக்குழுவின் கண்களுக்கு என்னவோ ஜெய்தேவ் உனதட்கட் தான் தெரிகின்றனர். ஜெய்தேவ் உனத்கட் போன்ற பவுலர்களினால் விக்கெட் கீப்பர்களுக்குத்தான் பிரச்சினை என்கிறார் ஸ்ரீகாந்த்.

சஹல் ஒரே ஓவரில் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றுகிறார். ஆனால் அவரது முழு 4 ஓவர் கோட்டாவை முடிக்கவில்லை. ஒரு ஓவர் கொடுத்து விட்டு பிறகு 13வது ஓவரைக் கொடுக்கிறார் கேப்டன் பாண்டியா. சரி அப்போதாவது இன்னொரு ஓவரைக்கொடுத்து கோட்டாவை முடித்தாரா என்றால் இல்லை. கட் பிறகு மீண்டும் 16வது ஓவரில் கொண்டு வருகிறார்.

ஆகாஷ் சோப்ரா இது தொடர்பாக வைக்கும் விமர்சனம் இதுதான், “இந்தியா அன்று தொடக்கத்தில் சரியாக பந்து வீசவில்லை. பிறகு சஹல் வந்தார், ஒரே ஓவரில் 2 விக்கெட்டுகளை வீழ்த்தி அணியின் நகரா சக்கரத்தை இயக்கினார். இவருக்கு 4 ஓவர்களை கொடுக்காததன் மூலம் ஹர்திக் பாண்டியா சாதகப் பலனை இழந்தார். நன்றாக அவர் வீசிய போதே நிகோலஸ் பூரனை அவர் வீழ்த்தியிருப்பார். லெக் ஸ்பின்னர் இடது கை பேட்டருக்கு சரிப்பட்டு மாட்டார் என்பது பாண்டியாவின் தவறான புரிதல். சஹல் இடது கை பேட்டர்களுக்கும் நன்றாக வீசக்கூடியவர்தான்” என்று சாடியுள்ளார்.

இந்தியாவுக்குச் சாதகமான மெதுவான, சுழல் ஆட்டக்களத்திலேயே இவர்கள் தோல்வி அடைகின்றனர் என்றால் உலகக் கோப்பையில் என்ன செய்யப் போகிறார்கள் என்ற சந்தேகம் ரசிகர்களுக்கு எழுந்துள்ளது. கடந்த 5 ஆண்டுகளாக இந்தியாவுக்கு எதிராக குறிப்பாக டி20 போட்டிகளில் வெஸ்ட் இண்டீஸ் அணி கடும் தோல்விகளைச் சந்தித்துள்ள நிலையில் எப்படி ஹர்திக் பாண்டியா அணி தோற்க முடியும் என்ற கேள்வி எழுகிறது. அகீல் ஹொசைன் அற்புதமாக வீசினார். 4 ஓவர்களில் 17 ரன்கள் மட்டுமே கொடுத்தார். இதில் 14 டாட் பால்கள். ஹோல்டர், ஓபெட் மெக்காய், ஷெப்பர்ட் ஆகியோர் இந்த முறை ஸ்லோயர் பந்துகளில் இந்திய பேட்டர்களின் பலவீனங்களை அம்பலப்படுத்தினர். திலக் வர்மா மட்டுமே தேறுகிறார். உலகக் கோப்பைக்கு முன்பாக ஒரு வலுவான அணியை கட்டமைப்பதில் ராகுல் திராவிட்டும் இந்திய அணி நிர்வாகமும் சோடை போகிறதோ என்ற சந்தேகம் எழவே செய்கிறது.

SCROLL FOR NEXT