லண்டன்: இங்கிலாந்துடனான ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் கடைசி போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற 384 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
லண்டனில் உள்ள தி ஓவல் மைதானத்தில் கடந்த 27-ம் தேதி இந்த டெஸ்ட் போட்டி தொடங்கியது. இங்கிலாந்து முதல் இன்னிங்ஸில் 283 ரன்களும், ஆஸ்திரேலியா 295 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தன.
இந்நிலையில், நேற்று முன்தினம் நடைபெற்ற 3-ம் நாள் ஆட்டத்தின் முடிவில் இங்கிலாந்து அணி தனது 2-வது இன்னிங்ஸில் 9 விக்கெட் இழப்புக்கு 389 ரன்கள் குவித்திருந்தது. 4-ம் நாள் ஆட்டத்தை ஆண்டர்சன் 8 ரன்களுடனும், ஸ்டூவர்ட் பிராட் 2 ரன்களுடனும் தொடங்கினர். ஆண்டர்சன் மேலும் ஏதும் ரன் சேர்க்காமல் ஆட்டமிழந்தார். இதையடுத்து 395 ரன்களுக்கு இங்கிலாந்தின் 2-ம் இன்னிங்ஸ் முடிவுக்கு வந்தது.
இதைத் தொடர்ந்து 384 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா 2-வது இன்னிங்ஸை விளையாடியது.
விக்கெட் இழப்பின்றி 135 ரன்கள் எடுத்திருந்தபோது மழை குறுக்கிட்டதால் ஆட்டம் நிறுத்தப்பட்டது. அப்போது டேவிட் வார்னர் 58, உஸ்மான் கவாஜா 69 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். ஆஸி. அணியின் வெற்றிக்கு 249 ரன்கள் தேவைப்படுகிறது.