இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் டெஸ்ட் தொடரின் கடைசி மற்றும் 5-வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணி 7 விக்கெட் இழப்புக்கு 186 ரன்கள் எடுத்து தடுமாறி வருகிறது.
லண்டனில் உள்ள தி ஓவல் மைதானத்தில் கடந்த 27-ம் தேதி இந்த டெஸ்ட் போட்டி தொடங்கியது. முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து 283 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. பென் டக்கெட் 41, ஸாக் கிராவ்லி 22, மொயின்அலி 34, ஹாரி புரூக் 85 ரன்கள் சேர்த்தனர்.கிறிஸ் வோக்ஸ் 36, மார்க் வுட் 28 ரன்கள்எடுத்தனர். ஆஸ்திரேலிய அணி சார்பில்மிட்செல் ஸ்டார்க் 4 விக்கெட்களையும்ஜோஷ் ஹேசில்வுட், டாட் மர்பி ஆகியோர்தலா 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
பின்னர் முதல் இன்னிங்ஸை விளையாடிய ஆஸ்திரேலிய அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 61 ரன்கள் எடுத்திருந்தது. வார்னர் 24 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
இந்நிலையில் 2-ம் நாள் ஆட்டத்தை கவாஜா 26 ரன்களுடனும், லபுஷேன் 2 ரன்களுடனும் தொடங்கினர். லபுஷேன் 9 ரன்களும், டிராவிஸ் ஹெட் 4 ரன்களும், மிட்செல் மார்ஷ் 16 ரன்களும், அலெக்ஸ் கேரி 10 ரன்களும்,மிட்செல் ஸ்டார்க் 7 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். நிதானமாக ஆடிய உஸ்மான் கவாஜா 47 ரன்களில் வீழ்ந்தார். தேநீர் இடைவேளையின்போது அந்த அணி 7 விக்கெட் இழப்புக்கு 186 ரன்கள் எடுத்திருந்தது.
ஸ்டீவன் ஸ்மித் 40 ரன்களும், பாட் கம்மின்ஸ் ஒரு ரன்னும் எடுத்து களத்தில் இருந்தனர். இங்கிலாந்து தரப்பில் ஸ்டூவர்ட் பிராட், மார்க் உட் ஆகியோர் தலா 2 விக்கெட்களைச் சாய்த்தனர். ஜேம்ஸ் ஆண்டர்சன், கிறிஸ் வோக்ஸ், ஜோ ரூட் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினர்.