காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் 50 மீ. பிஸ்டல் துப்பாக்கி சுடுதலில் இந்தியாவின் ஜிது ராய் தங்கப் பதக்கமும், குருபால் சிங் வெள்ளிப் பதக்கமும் வென்றனர்.
ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் திங்கள்கிழமை நடைபெற்ற இந்தப் போட்டியில் ராணுவ வீரரான ஜிது ராய் 194.1 புள்ளிகளுடன் முதலிடத்தைப் பிடித்தார். இறுதிச்சுற்றின் முதல் ரவுண்டில் 29.7 புள்ளிகளைப் பெற்ற ஜிது ராய், கடைசி வரை முன்னிலையை காப்பாற்றிக் கொண்டார். இறுதியில் அவர் 194.1 புள்ளிகளுடன் சாம்பியன் ஆனார். முன்னதாக நடைபெற்ற தகுதிச்சுற்றில் காமன்வெல்த் போட்டி சாதனையை ஜிது ராய் முறியடித்தது குறிப்பிடத்தக்கது.
வெள்ளிப் பதக்கம் வென்ற குருபால் சிங் 187.2 புள்ளிகள் பெற்றார். ஆஸ்திரேலியாவின் டேனியல் ரெபசோலி 166.6 புள்ளிகளுடன் வெண்கலப் பதக்கம் வென்றார்.