கொழும்பு: இலங்கைக்கு எதிரான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 222 ரன் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றது. இதன் மூலம் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை பாகிஸ்தான் அணி முழுமையாக 2-0 என கைப்பற்றியது.
கொழும்பு நகரில் நடைபெற்ற 2-வது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி முதல் இன்னிங்ஸில் 166 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதையடுத்து விளையாடிய பாகிஸ்தான் அணி 3-வது நாள் ஆட்டத்தின் முடிவில் 132 ஓவர்களில் 5 விக்கெட்கள் இழப்புக்கு 563 ரன்கள் எடுத்தது. அப்துல் ஷபிக் 201 ரன்கள் விளாசி ஆட்டமிழந்தார். அகா சல்மான் 132, மொகமது ரிஸ்வான் 37 ரன்கள் சேர்த்து களத்தில் இருந்தனர்.
நேற்று 4-வது நாள் ஆட்டத்தை தொடர்ந்து விளையாடிய பாகிஸ்தான் அணி 134 ஓவர்களில் 5 விக்கெட்கள் இழப்புக்கு 576 ரன்கள் எடுத்த நிலையில் முதல் இன்னிங்ஸை டிக்ளேர் செய்தது. அகா சல்மான் 154 பந்துகளில், ஒரு சிக்ஸர், 15 பவுண்டரிகளுடன் 132 ரன்களும், மொகமது ரிஸ்வான் 67 பந்துகளில், ஒரு சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 50 ரன்களும் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். இலங்கை அணி தரப்பில் அஷிதா பெர்னாண்டோ 3, பிரபாத் ஜெயசூர்யா 2 விக்கெட்கள் வீழ்த்தினர்.
410 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்ஸை விளையாடிய இலங்கை அணி 67.4 ஓவர்களில் 188 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. அதிகபட்சமாக ஏஞ்சலோ மேத்யூஸ் 127 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 7பவுண்டரிகளுடன் 63 ரன்கள் சேர்த்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். நிஷான் மதுஷ்கா 33, திமுத் கருணரத்னே 41, குஷால் மெண்டிஸ் 14, தினேஷ்சந்திமால் 1, தனஞ்ஜெயா டி சில்வா 10, சதீரா சமரவிக்ரமா 5, ரமேஷ் மெண்டிஸ் 16, பிரபாத் ஜெயசூர்யா 0, அஷிதா பெர்னாண்டோ 0, தில்ஷான் மதுஷ்கா 0 ரன்களில் நடையை கட்டினர்.
பாகிஸ்தான் அணி சார்பில் நோமன் அலி 7 விக்கெட்களையும் நசீம் ஷா 3 விக்கெட்களையும் வீழ்த்தினர். இன்னிங்ஸ் மற்றும் 222 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரை முழுமையாக 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி கோப்பையை வென்றது. காலே நகரில் நடைபெற்ற முதல் போட்டியில் பாகிஸ்தான் அணி 4 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது. ஆட்ட நாயகனாக அப்துல் ஷபிக்கும், தொடர் நாயகனாக அகா சல்மானும் தேர்வானார்கள்.