பார்படாஸ்: எதிர்வரும் உலகக் கோப்பை தொடருக்கு முன்னதாக பும்ரா அணிக்கு திரும்புவார் என நம்புவதாக இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா தெரிவித்துள்ளார். மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கு முன்னதாக நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் இதனை அவர் தெரிவித்திருந்தார்.
ரோகித் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி மேற்கு இந்தியத் தீவுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான டெஸ்ட் தொடரை 1-0 என்ற கணக்கில் இந்தியா வென்றது. இந்நிலையில், 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் இன்று பார்படாஸில் தொடங்குகிறது.
“பும்ராவின் அனுபவம் அணிக்கு மிகவும் அவசியம். அவர் மோசமான காயத்திலிருந்து மீண்டுள்ளார். அவர் அயர்லாந்து பயணித்து கிரிக்கெட் விளையாடுவது குறித்து இப்போதைக்கு சொல்ல முடியாது. ஏனெனில், அந்த தொடருக்கான அணி அறிவிக்க வேண்டி உள்ளது.
அவர் விளையாடினால் அது நல்லது. உலகக் கோப்பை தொடருக்கு முன்னதாக அணிக்கு அவர் திரும்புவார் என நாங்கள் நம்புகிறோம். ஒரு வீரர் காயத்திலிருந்து மீண்டு அணிக்குள் திரும்பும் போது போட்டி சார்ந்து சில விஷயங்கள் முக்கியம். அதை அவர் விஷயத்தில் கருத்தில் கொள்ள வேண்டும். தேசிய கிரிக்கெட் அகாடமியுடன் இது குறித்து பேசி வருகிறோம். இப்போதைக்கு அவர் குறித்து வரும் தகவல் அனைத்தும் பாசிட்டிவாக உள்ளது” என ரோகித் தெரிவித்துள்ளார்.
29 வயதான பும்ரா, கடந்த 2016 முதல் சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக விளையாடி வருகிறார். 30 டெஸ்ட், 72 ஒருநாள் மற்றும் 60 சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடி உள்ளார். மொத்தம் 319 விக்கெட்டுகளை கைப்பற்றி உள்ளார். கடைசியாக கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் டி20 கிரிக்கெட் போட்டியில் விளையாடி இருந்தார். அதன் பிறகு முதுகு வலி காரணமாக அவர் விளையாடவில்லை.