போர்ட் ஆஃப் ஸ்பெயின்: இந்தியாவுக்கு எதிரான 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடரில் கலந்து கொள்ளும் மேற்கு இந்தியத் தீவுகள் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் அதிரடி பேட்ஸ்மேன் ஷிம்ரன் ஹெட்மயர், வேகப்பந்து வீச்சாளர் ஓஷன் தாமஸ் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்திய கிரிக்கெட் அணி மேற்கு இந்தியத் தீவுகளில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்திய அணி 1-0 என கைப்பற்றியது. டெஸ்ட் போட்டியை தொடர்ந்து 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடரில் இரு அணிகளும் மோதுகின்றன. இதன் முதல் ஆட்டம் நாளை (27-ம் தேதி) கென்சிங்டன் ஓவலில் நடைபெறுகிறது.
இந்நிலையில் இந்த தொடருக்கான 15 பேர் கொண்ட மேற்கு இந்தியத் தீவுகள் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் முன்னாள் கேப்டன் நிக்கோலஸ் பூரன், ஆல்ரவுண்டர் ஜேசன் ஹோல்டர் ஆகியோர் தேர்வு செய்யப்படவில்லை. ஆல்ரவுண்டர் கீமோ பால் காயம் காரணமாக விலகி உள்ளார். காயத்தில் இருந்து குணமடைந்துள்ள வேகப்பந்து வீச்சாளர் ஜெய்டன் சீல்ஸ், சுழற்பந்து வீச்சாளர் யானிக் கரியா ஆகியோரும் அணியில் இடம் பெற்றுள்ளனர். இடது கை சுழற்பந்து வீச்சாளர் குடகேஷ் மோட்டிக்கும் இடம் வழங்கப்பட்டுள்ளது.
அதிரடி பேட்ஸ்மேனான ஷிம்ரன் ஹெட்மயர் ஒரு வருடத்துக்கு பிறகு அணிக்கு திரும்பி உள்ளார். கடைசியாக அவர், கடந்த 2022-ம் ஆண்டு ஜூலையில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் விளையாடி இருந்தார். சமீபத்தில் ஜிம்பாப்வேயில் நடைபெற்ற ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடருக்கான தகுதி சுற்றில் ஷிம்ரன் ஹெட்மயர் புறக்கணிக்கப் பட்டிருந்தார். வேகப்பந்து வீச்சாளரான ஓஷன் தாமஸ் கடைசியாக 2021-ம் ஆண்டு டிசம்பரில் மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்காக விளையாடி இருந்தார்.
அணி விவரம்: ஷாய் ஹோப் (கேப்டன்), ரோவ்மன் பவல், அலிக் அத்தனாஸ், யானிக் கரியா, கீசி கார்டி, டொமினிக் டிரேக்ஸ், ஷிம்ரன் ஹெட்மயர், அல்ஸாரி ஜோசப், பிரண்டன் கிங், கைல் மேயர்ஸ், குடகேஷ் மோட்டி, ஜெய்டன் சீல்ஸ், ரொமாரியோ ஷெப்பர்ட், ஓஷன் தாமஸ், கெவின் சின்க்ளேர்.