புதுடெல்லி: உலக பாட்மிண்டன் கூட்டமைப்பு தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் சமீபத்தில் கொரியா ஓபன் பாட்மிண்டன் தொடரில் ஆடவர் இரட்டையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்ற இந்தியாவின் சாட்விக்சாய்ராஜ் ராங்கிரெட்டி, ஷிராக் ஷெட்டி ஜோடி ஓர் இடம் முன்னேறி 2-வது இடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளது.
சீனாவின் லியாங் வெய் கெங், வாங் ஷாங் ஜோடியை பின்னுக்கு தள்ளி 2-வது இடத்துக்கு முன்னேறி உள்ளது சாட்விக், ஷிராக் ஜோடி. ஆசிய சாம்பியனான இந்த ஜோடி இந்த சீசனில் 500 புள்ளிகள் கொண்ட கொரியா ஓபன், 300புள்ளிகள் கொண்ட சுவிஸ் ஓபன், ஆயிரம் புள்ளிகள் கொண்ட இந்தோனேஷியா ஓபன் ஆகியவற்றில் பட்டம் வென்றிருந்தது. தற்போது சாட்விக், ஷிராக் ஜோடி 87,211 புள்ளிகளுடன் உள்ளது.
மகளிர் ஒற்றையர் பிரிவு தரவரிசையில் பி.வி.சிந்து 17-வது இடத்தில் தொடர்கிறார். சாய்னா நெவால் ஓர் இடம் பின்தங்கி 37-வது இடத்தில் உள்ளார். ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் ஹெச்.எஸ்.பிரனோய் 10-வது இடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளார். கனடா ஓபனில் பட்டம் வென்ற லக் ஷயா சென் ஓர் இடத்தை இழந்து 13-வது இடத்தில் உள்ளார். இந்த சீசனில் தடுமாறி வரும் கிடாம்பி ஸ்ரீகாந்த் 20-வது இடத்தில் தொடர்கிறார்.