மான்செஸ்டர்: நடப்பு ஆஷஸ் தொடரின் நான்காவது டெஸ்ட் போட்டி மழையால் டிரா ஆனது. இதனால் ஆஸ்திரேலிய அணி தொடரை தக்க வைத்துள்ளது.
இங்கிலாந்து நடைபெற்று வரும் நடப்பு ஆஷஸ் தொடரில் ஆஸ்திரேலிய அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. முதல் 2 போட்டிகளில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது. மூன்றாவது போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்றது. நான்காவது போட்டி மான்செஸ்டரில் கடந்த 19-ம் தேதி தொடங்கியது.
இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பவுலிங் தேர்வு செய்தது. முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலியா 317 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இங்கிலாந்து அணி 592 ரன்கள் குவித்து முதல் இன்னிங்ஸில் 275 ரன்கள் முன்னிலை பெற்றது. ஆஸ்திரேலிய அணி இரண்டாவது இன்னிங்ஸில் முதல் 4 விக்கெட்டுகளை விரைந்து இழந்தது.
லபுஷேன் மற்றும் மிட்செல் மார்ஷ் இடையிலான கூட்டணி அந்த அணிக்கு அவசியமானதாக அமைந்தது. இருவரும் 103 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்தனர். லபுஷேன், 111 ரன்களில் ஆட்டமிழந்தார். இருந்தும் நான்காவது நாள் ஆட்டத்தின் காலை செஷன் மற்றும் ஐந்தாம் நாள் ஆட்டம் முழுவதும் மழையால் பாதிக்கப்பட்டது. இதனால் போட்டியில் முடிவு எட்டாத காரணத்தால் ஆட்டம் டிரா ஆனது.
மழை இங்கிலாந்து அணியின் வெற்றியை பறித்து விட்டதாக அந்த அணியின் ரசிகர்கள் சொல்லி வருகின்றனர். கடந்த முறை ஆஷஸ் தொடரை ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது. அதனால் நடப்பு ஆஷஸ் தொடரை அந்த அணி தக்கவைத்துள்ளது. ஏனெனில், நடப்பு ஆஷஸ் தொடரில் முதல் 4 போட்டிகளில் ஆஸ்திரேலியா 2 போட்டிகளிலும் வெற்றி, இங்கிலாந்து 1 போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளது. ஒரு போட்டி டிரா ஆகியுள்ளது. இந்த தொடரின் 5-வது போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்றாலும் தொடரை ஆஸி. தக்க வைக்கும்.