விளையாட்டு

ஆஷஸ் கிரிக்கெட் தொடர் - தோல்வியை தவிர்க்க ஆஸ்திரேலிய அணி போராட்டம்

செய்திப்பிரிவு

மான்செஸ்டர்: இங்கிலாந்து அணிக்கு எதிரான ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் 4-வது ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி தோல்வியை தவிர்க்க போராடி வருகிறது.

மான்செஸ்டர் நகரில் உள்ள ஓல்டு டிராஃபோர்டு மைதானத்தில் நடைபெற்று வந்த 4-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 317 ரன்கள் எடுத்தது. இதையடுத்து பேட் செய்த இங்கிலாந்து அணி 3-வது நாள் ஆட்டத்தில் 107.4 ஓவர்களில் 5.49 சராசரியுடன் 592 ரன்கள் குவித்து முதல் இன்னிங்ஸில் ஆட்டமிழந்தது.

அதிகபசட்மாக ஸாக் கிராவ்லி 189, ஜானி பேர்ஸ்டோ 99, ஜோ ரூட் 84, ஹாரி புரூக் 61, மொயின் அலி 54, பென் ஸ்டோக்ஸ் 51 ரன்கள் சேர்த்தனர். 275 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்ஸை விளையாடத் தொடங்கிய ஆஸ்திரேலிய அணி 3-வது நாள் ஆட்டத்தின் முடிவில் 41 ஓவர்களில் 4 விக்கெட்கள் இழப்புக்கு 113 ரன்கள் எடுத்தது.

உஸ்மான் கவாஜா 18, டேவிட் வார்னர் 28, ஸ்டீவ் ஸ்மித் 17, டிராவிஸ் ஹெட் 1 ரன்னில் ஆட்டமிழந்தனர். மார்னஷ் லபுஷேன் 44, மிட்செல் மார்ஷ் 1 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். நேற்று 4-வது நாள் ஆட்டம் மழை காரணமாக மதிய உணவு இடைவேளைக்கு பின்னரே தொடங்கியது.

மார்னஷ் லபுஷேன் அதிரடியாக விளையாடினார். அவர், 161 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 9 பவுண்டரிகளுடன் சதம் விளாசினார். இது அவரது 11-வது சதமாக அமைந்தது. மறுமுனையில் மிட்செல் மார்ஷ் தடுப்பாட்டத்தில் அதிக கவனம் செலுத்தினார். மட்டையை சுழற்றிய லபுஷேன் 173 பந்துகளில் 111 ரன்கள் எடுத்த நிலையில் ஜோ ரூட் பந்தில் ஆட்டமிழந்தார்.

70 ஓவர்கள் வீசப்பட்ட நிலையில் ஆஸ்திரேலிய அணி 5 விக்கெட்கள் இழப்புக்கு 214 ரன்கள் எடுத்திருந்தது. கேமரூன் கிரீன் 3 ரன்களுடனும், மிட்செல் மார்ஷ் 31 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

SCROLL FOR NEXT