விளையாட்டு

பயிற்சியின் போது நிருபருக்கு காயம்: பதறிய விராட் கோலி

ஐஏஎன்எஸ்

இந்திய கிரிக்கெட் அணி பயிற்சியின் போது தனியார் தொலைக்காட்சியைச் சேர்ந்த ஒருவர் காயமடைந்ததால் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பதறியுள்ளார்.

இந்தியா - இலங்கை டெஸ்ட் தொடர் தொடங்கவுள்ள நிலையில் இந்திய அணி ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் தீவிர வலைப் பயிற்சியில் ஈடுபட்டுள்ளது. செவ்வாய்க்கிழமை பயிற்சியின்போது வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி பவுலிங் போட விராட் கோலி பேட்டிங் ஆடி வந்தார்.

அப்போது ஷமி வீசிய ஒரு பந்தை விராட் கோலி ஆடத் தவற அது வலைக்குப் பின்னால் நின்று கொண்டிருந்த தொலைக்காட்சி நிருபர் ஒருவரை நெற்றியில் தாக்கியது. உடனே நிருபருக்கு என்ன ஆனதென்று பார்க்க கோலியும், ஷமியும் பதறியடித்துக் கொண்டு ஓடினர்.

பின்னர் இந்திய அணியின் உடற்பயிற்சி மருத்துவர் பேட்ரிக் ஃபர்ஹார்ட் வந்து அந்த நிருபருக்கு சிகிச்சை தந்தார். சம்பந்தப்பட்ட தொலைக்காட்சி குழு நலமாக இருக்கிறதா என்பதை உறுதி செய்த பின்னரே கோலி மீண்டும் பயிற்சியைத் தொடங்கினார்.

இந்தியா  - இலங்கை இடையேயான முதல் டெஸ்ட் போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் வியாழக்கிழமை தொடங்கவுள்ளது.

SCROLL FOR NEXT