இலங்கை அணிக்கு எதிராக கொல்கத்தா ஈடன் கார்டனில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியின் கடைசி நாள் ஆட்டத்தை பரபரப்பாக மாற்றியதில் விராட் கோலிக்கு முக்கிய பங்கு உண்டு. தனது ஆக்ரோஷமான ஆட்டத்தால் சதம் அடித்ததுடன் இலங்கை அணிக்கு தோல்வி பயத்தையும் உருவாக்கினார்.
2-வது இன்னிங்ஸில் ஷிகர் தவண், கே.எல்.ராகுல் ஜோடி வலுவான தொடக்கம் அமைத்துக் கொடுத்த போதிலும் கடைசி நாள் ஆட்டத்தின் முதற் பகுதியில் இலங்கை அணியின் கையே ஓங்கியிருந்தது. ராகுல் 79, புஜாரா 22, ரஹானே 0, ஜடேஜா 5 ரன்களில் நடையை கட்ட நெருக்கடி உருவானது.
ஜடேஜா விக்கெட்டை இழக்கும் போது ஸ்கோர் 249 ஆக இருந்தது. வெறும் 127 ரன்களே முன்னிலையாக இருந்த நிலையில் விராட் கோலி 58 பந்துகளில் 38 ரன்கள் சேர்த்து தற்காத்துக் கொள்ள வேண்டிய நிலையில் தான் இருந்தார். இந்த சூழ்நிலையில், எதிர்முனையில் உள்ள விக்கெட்களை விரைவில் வீழ்த்த இலங்கை திட்டமிட்டது.
அவர்கள் எண்ணப்படி அஸ்வின் 7, விருத்திமான் சாஹா 5, புவனேஷ்வர் குமார் 8 ரன்களில் சீரான இடைவெளியில் ஆட்டமிழந்தனர். எனினும் இவர்கள் விராட் கோலியுடன் இணைந்து சுமார் 20 ஓவர்கள் களத்தில் நிலைத்து நின்றனர். இந்த இடைப்பட்ட ஓவர்களில் விராட் கோலி, விரைவாக ரன்கள் சேர்த்தார்.
அற்புதமாக பந்து வீசிக் கொண்டிருந்த சுரங்கா லக்மலுக்கு எதிராக எக்ஸ்டிரா கவர் திசையில் விளாசிய இரு அற்புதமான சிக்ஸர்கள் விராட் கோலி பேட்டிங்கின் மற்றுமொரு பரிமாணத்தை வெளிப்படுத்தியது. 119 பந்துகளில், 12 பவுண்டரிகள், 2 சிக்ஸர்களுடன் 104 ரன்கள் விளாசிய அவர், இலங்கை அணியின் கட்டுப்பாட்டில் இருந்த ஆட்டத்தின் போக்கை மாற்றினார். இதனால் இந்திய அணியை குறைந்த ரன்களில் ஆட்டமிழக்க செய்ய நினைத்த இலங்கை அணியின் கனவு தகர்ந்தது.
டெஸ்ட்டில் விராட் கோலி குறைந்த பந்துகளில் அடித்த சதமாகவும் இது அமைந்தது. இதற்கு முன்னர் 2014-ம் ஆண்டு வெலிங்டனில் நியூஸிலாந்துக்கு எதிராக 129 பந்துகளில் சதம் அடித்திருந்தார். அனைத்து வடிவிலான கிரிக்கெட்டிலும் விராட் கோலி 50 சதங்களை (டெஸ்ட் 18, ஒருநாள் போட்டி 32) அடித்துள்ளார். அவரது சாதனை சதத்தை தொடர்ந்து குறைந்தது 49 ஓவர்கள் மீதம் இருந்த நிலையில் இலங்கை அணிக்கு 231 ரன்களை இலக்காக கொடுத்தது இந்திய அணி.
புவனேஷ்வர் குமார் 4 விக்கெட்களும், முகமது ஷமி 2 விக்கெட்களும், இவர்களுக்கு உறுதுணையாக செயல்பட்ட உமேஷ் யாதவ் ஒரு விக்கெட்டும் வீழ்த்த இலங்கை அணி 75 ரன்களுக்கு 7 விக்கெட்களை இழந்து தோல்வியின் விளிம்பில் இருந்தது. இந்திய அணி வெற்றிக்கு அருகில் இருந்த நிலையில் போதிய வெளிச்சம் இல்லாத காரணத்தால் ஆட்டம் டிரா ஆனது.
ஒருவேளை கூடுதலாக சில ஓவர்கள் வீசுவதற்கு நேரம் கிடைத்திருந்தால் ஆட்டத்தின் முடிவு கிடைத்திருக்கக்கூடும். நடுவர் ஆட்டத்தை டிரா என்று அறிவிக்கும் சில ஓவர்களுக்கு முன்னரே, எல்லைக் கோட்டுக்கு வெளியே அமர்ந்திருந்த இலங்கை அணியின் கேப்டன் தினேஷ் சந்திமாலின் முகத்தில் தோல்வி பயம் வியாபிக்க தவறவில்லை. வெளிச்சம் குறைவாக உள்ளது, வீரர்கள் எப்படி பேட் செய்ய முடியும் என்ற வகையில் அவரது பாவனைகள் வெளிப்பட்டன. இது தோல்வி பயத்தின் வெளிப்பாடாகவே கருதப்படுகிறது. மேலும் ஒரு கேப்டனின் போதாத அனுபவமின்மையை வெளிப்படுத்தியது.
இந்த ஆட்டத்தில் விராட் கோலியின் சாதனை சதம் ஒருவித சிறப்பு தான். முதலில் ஆட்டத்தை கட்டமைக்கும் முனைப்புடன் கோலி விளையாடினார். அவரது முதல் 50 ரன்கள் 80 பந்துகளில் சேர்க்கப்பட்டன. ஆனால் ஆட்டத்தின் தீவிரம் இலங்கை பக்கம் சாய்வது போன்ற தோற்றம் தெரிந்ததும் மட்டையை சுழற்ற ஆரம்பித்தார் கோலி.
இதன் விளைவாகத்தான் அடுத்த 39 பந்துகளில் 54 ரன்களை விளாசினார். அவரது சதத்தால்தான், இலங்கை அணிக்கு ஒருவகையில் தோல்வி பயத்தை கொடுக்க முடிந்தது. கேப்டனாக கோலி அடித்துள்ள 11-வது சதம் இது. இதன் மூலம் இந்திய கேப்டன்களில் அதிக சதம் அடித்த கவாஸ்கரின் சாதனையை சமன் செய்துள்ளார்.
மேலும் சர்வதேச அரங்கில் அனைத்து வடிவிலான கிரிக்கெட்டிலும் அதிவிரைவாக 50 சதங்களை எட்டிய ஹசிம் ஆம்லாவுடன் (348 இன்னிங்ஸ்) சாதனையை பகிர்ந்து கொண்டுள்ளார். அதிக சதங்கள் அடித்துள்ளவர்களின் பட்டியலில் சச்சின் 100 சதங்களுடன் முதலிடத்தில் உள்ளார். தற்போது அதில் பாதியை எட்டி உள்ள விராட் கோலி இதே வேகத்தில் சென்றால், இந்த வரிசையில் அடுத்ததாக உள்ள பிரையன் லாரா (53), ஹசிம் ஆம்லா (54), ஜெயவர்தனே (54), ஜேக் காலிஸ் (62), சங்கக்கரா (63), ரிக்கி பாண்டிங் (71) ஆகியோரது சாதனைகளையும் தகர்த்தெறியும் காலம் வெகுதூரம் இல்லை.
விராட் கோலி கூறும்போது, “50 சதங்கள் அடித்துள்ளது நன்றாகத்தான் உள்ளது. எனினும் நீண்ட நேரம் பயணித்திருப்பதாக கருதவில்லை. இந்திய அணிக்காக விளையாடும்போது கிடைக்கும் மகிழ்ச்சி, எத்தனை சதங்கள் அடித்தாலும் கிடைக்காது. இந்த மனநிலையுடன்தான் தற்போது வரை விளையாடி வருகிறேன்” என்றார்.
பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கூறும்போது, “விராட் கோலிக்கு வானம்தான் எல்லை. அவர், ஒரு அற்புதமான வீரர். அவரும், ஒட்டுமொத்த இந்திய அணியும் விளையாடிய விதம் மகிழ்ச்சியாக உள்ளது” என்றார்.
முன்னாள் கேப்டன் கங்குலி கூறும்போது, “கோலி விளையாடியது கம்பீரமான இன்னிங்ஸ். கேப்டனாகவும் அவர் சிறப்பாக செயல்படுகிறார். எனினும் அவர், பயணிக்க வேண்டிய தூரம் அதிகம் உள்ளது. சச்சினுடன் கோலியை ஒப்பிடுவது தேவையில்லாதது. சச்சினை நெருங்குவதற்கு கோலி இன்னும் 50 சதங்களுக்கு மேல் அடிக்க வேண்டும், எனினும் அவர் செல்லும் வேகத்துக்கு இன்னும் பல சதங்கள் அடிப்பார்” என்றார்.