மும்பை: இந்திய கிரிக்கெட் அணியினர் வரும் டிசம்பரில் தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து டெஸ்ட், ஒருநாள், சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகளில் விளையாட உள்ளனர்.
இந்தியாவில் வரும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் 50 ஓவர் உலககோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற உள்ளது. இந்த தொடருக்கு பின்னர் இந்திய அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்யஉள்ளது.தென் ஆப்பிரிக்க அணியுடன் 3 டி20, 3 ஒருநாள், 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி விளையாட உள்ளது.
இதற்கான போட்டி அட்டவணையை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) வெளியிட்டுள்ளது. அதன் விவரம்:
முதல் டி20 ஆட்டம் டிசம்பர் 10-ம் தேதி டர்பனிலும், 2-வது டி20 ஆட்டம் 12-ம் தேதி கெபர்ஹாவிலும், 3-வது டி20 ஆட்டம் ஜோஹன்னஸ்பர்க்கில் டிசம்பர் 14-ம் தேதியும் நடைபெறும்.
இதைத் தொடர்ந்து டிசம்பர் 17-ம் தேதி முதலாவது ஒருநாள் போட்டி ஜோஹன்னஸ்பர்க்கிலும், 2-வது ஒரு நாள் போட்டி டிசம்பர் 19-ம் தேதி கெபர்ஹாவிலும், 3-வது ஒரு நாள் போட்டி டிசம்பர் 21-ம் தேதி பார்ல் நகரிலும் நடைபெறவுள்ளன.
டிசம்பர் 26-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை முதலாவது டெஸ்ட் போட்டி செஞ்சுரியனில் நடைபெறும். இதைத் தொடர்ந்து 2-வது டெஸ்ட் போட்டி அடுத்த ஆண்டு ஜனவரி 3 முதல் 7 வரை கேப்டவுனில் அரங்கேற உள்ளது.