காலே: பாகிஸ்தான் அணியுடனான முதல் கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி வீரர்கள் நிதானமாக விளையாடினர். முதல் நாள் ஆட்ட நேர இறுதியில் இலங்கை அணி 6 விக்கெட் இழப்புக்கு 242 ரன்கள் எடுத்துள்ளது.
பாகிஸ்தான் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இந்நிலையில் நேற்று இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி காலேவிலுள்ள காலே சர்வதேச மைதானத்தில் தொடங்கியது.
டாஸில் வெற்றி பெற்ற இலங்கை அணியின் கேப்டன் திமுத் கருணாரத்னே, தனது அணியை பேட்டிங் செய்ய களமிறக்கினார்.
நிஷன் மதுஷ்கா 4, திமுத் கருணாரத்னே 29, குசல் மெண்டிஸ் 12, தினேஷ் சண்டிமல் 1, சதீரா சமரவிக்ரமா 36 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். ஏஞ்சலோ மேத்யூஸ் 109 பந்துகளில் 64 ரன்கள் சேர்த்து அப்ரார் அகமது பந்தில் ஆட்டமிழந்தார்.
ஆட்ட நேர இறுதியில் இலங்கை அணி 6 விக்கெட் இழப்புக்கு 242 ரன்கள் எடுத்திருந்தது. தனஞ்செய டி சில்வா 94 ரன்களுடனும் களத்தில் இருந்தார்.