விளையாட்டு

விஜய், ஜடேஜா, புவனேஷ் அபார ஆட்டம்: இந்தியா 342 ரன்களுக்கு ஆல் அவுட்

செய்திப்பிரிவு

லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியின் 4ஆம் நாளான இன்று இந்தியா தனது 2வது இன்னிங்ஸில் 342 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

விறுவிறுப்பான லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியின் 4ஆம் நாளான இன்று இந்தியா உணவு இடைவேளைக்கு முன்பான 2 மணி நேர ஆட்டத்தில் விஜய், தோனி, பின்னி ஆகியோர் விக்கெட்டுகளை பறிகொடுத்தது.

உணவு இடைவேளையின் போது இந்தியா தன் 2வது இன்னிங்ஸில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 267 ரன்கள் எடுத்திருந்தது.

ஜடேஜா 30 பந்துகளில் 6 பவுண்டரிகளுடன் 37 ரன்களுடனும், புவனேஷ் குமார் 13 ரன்களுடனும் ஆடி வந்தனர். பிறகு இருவருமே அரைசதம் கண்டனர். அதிலும் ஜடேஜா குறிப்பாக அடித்து நொறுக்கினார். 57 பந்துகளில் அவர் 9 பவுண்டரிகளுடன் 68 ரன்கள் எடுத்தார்.

புவனேஷ் குமாரும் அவரும் இணைந்து 8 வது விகெட்டுக்காக 99 ரன்களை விரைவு கதியில் சேர்த்தனர். 68 ரன்கள் எடுத்த ஜடேஜா ஸ்டோக்ஸ் பந்தை புல் ஆட நினைத்து மிட் ஆனில் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

அதன் பிறகு புவனேஷ் குமார் அபாரமான சில ஷாட்களில் 8 பவுண்டரிகளுடன் 71 பந்துகளில் 52 ரன்கள் சேர்த்து ஸ்டோக்ஸ் பந்தில் ஆட்டமிழந்தார். இந்தத் தொடரில் அவர் எடுக்கும் 3வது அரை சதம் ஆகும் இது. அதுவும் இந்தியா 235/7 என்ற நிலையில் தோல்வி முகம் காட்டியபோது உள்ளே வந்து ஜடேஜாவுடன் இணைந்து அற்புதமாக ஆடினார்.

ஷமி 0-வில் அவுட் ஆனார். இங்கிலாந்து தரப்பில் ஸ்டோக்ஸ், பிளன்கெட் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்த மொயின் அலி 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

முன்னதாக...

இன்று காலை 169/4 என்று துவங்கிய இந்திய அணி, 33 ரன்களில் 3 விக்கெட்டுகளை, 8 ஓவர்கள் இடைவெளியில் இழந்தது.

முரளி விஜய் 59 ரன்னிலிருந்து 95 ரன்கள் வரை வந்தார். 247 பந்துகளை அவர் சந்தித்து சுனில் கவாஸ்கரின் பொறுமையைக் கடைபிடித்தார். தோனி 86 பந்துகளைச் சந்தித்து அறு அறுவென்று அறுத்து 19 ரன்களை மட்டுமே எடுத்து பிளன்கெட் வீசிய பந்தை ஒன்று முன்னால் சென்று ஆடியிருக்க வேண்டும், இல்லையெனில் இன்னும் பின்னால் வந்து மணிக்கட்டைத் தளர்த்தி ஆடியிருக்கவேண்டும். ஆனால் நின்ற இடத்திலிருந்து தன் வழியில் சென்று கொண்டிருந்த பந்தை தன் மட்டையால் மோசமாக ஒரு இடி இடித்தார். எட்ஜ் ஆகி 2வது ஸ்லிப்பில் பெல் கையில் தஞ்சம் அடைந்தது.

தோனிக்கு இருக்கும் பேட்டிங் டெக்னிக்கிற்கு அவர் நின்று ஆடுவது நேரத்தின் விரயமே. ஏதாவது அனாயச சுழற்று சுழற்றியிருந்தால் கூட 86 பந்துகளுக்குப் பதிலாக 45-50 பந்துகளில் ஒரு 40 ரன்களை அடித்து பங்களிப்பு செய்திருக்கலாம். ஆனால் இது போன்று ஆடினால் அது இங்கிலாந்தின் பொறியில் சிக்குவது போல்தான். தேவை ரன்கள். அதற்கு என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்வதுதான் டெஸ்ட் போட்டியில் உத்தமம்.

'இனி அடித்து ஆடப்போகிறேன்’ என்று வீராவேசப் பேட்டிக் கொடுத்த தோனி ஒரு நோஞ்சான் இன்னிங்ஸை ஆடி வெளியேறினார்.

இவர் ஆட்டமிழந்த ஓவருக்கு அடுத்த ஓவரின் 5வது பந்தில் ஸ்டூவர்ட் பின்னி பொறுப்பற்ற முறையில் ஒரு ஷாட்டை ஆடி அவுட் ஆனார். 8 பந்துகள் ரன் எடுக்க முடியாமல் ஆடிவிட்டு 9வது பந்தில் ஏன் அப்படி வாரிக்கொண்டு அடிக்கச் சென்றார் என்பது புரியவில்லை. மிட் ஆஃபில் பந்து மேலே ஏற அலிஸ்டர் குக் கேட்ச் பிடித்தார். பின்னி ரன் எடுக்காமல் அவுட் ஆனார். மொயின் அலியின் பந்தில் இவர் அவுட் ஆனார்.

2 விக்கெட்டுகள் அடுத்தடுத்து விழுந்ததில் அபார டெஸ்ட் இன்னிங்ஸை ஆடிவந்த முரளி விஜய்யின் கவனம் சிதறி 95 ரன்கள் எடுத்திருந்தபோது அவர் ஆண்டர்சனின் டீசருக்கு இரையானார். ஆஃப் ஸ்டம்பிற்கு வெளியே சென்ற அந்தப் பந்தை அவர் ஆடியிருக்க வேண்டியத் தேவையில்லை. ஆடினார். ஆட்டமிழந்தார்.

ஜடேஜா அடித்த பவுண்டரிகல் அனைத்தும் அபாரம். ஆண்டர்சனை அடித்த கவர் டிரைவ், பிராடை நேராக தூக்கி அடித்த ஷாட் மற்றும் ஒரு அதிரடி புல் ஷாட் ஜடேஜாவுக்காக பேசும் ஷாட்கள்.

புவனேஷ் குமார் 2 ரன்களில் இருந்தபோது ஜோ ரூட் கேட்சை விட்டார். அதன் பிறகு அவரை ஒன்றும் செய்ய முடியவில்லை.

இங்கிலாந்து அணிக்கு வெற்றி இலக்கு 319 ரன்கள்/. அந்த அணி ராப்சன் விக்கெட்டை ஜடேஜாவிடம் இழந்து 12 ரன்கள் எடுத்துள்ளது. இன்று இன்னும் குறைந்தது 40 ஓவர்கள் மீதமுள்ளன.

SCROLL FOR NEXT