விளையாட்டு

உமேஷ் யாதவ் அபாரம்: ஆஸ்திரேலியா ஏ 423 ரன்கள்; இந்தியா ஏ 165/3

செய்திப்பிரிவு

பிரிஸ்பனில் நடைபெறும் ஆஸ்திரேலியா ஏ - இந்தியா ஏ அணிகளுக்கு இடையேயான 2வது 4 நாள் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்ட முடிவில் இந்தியா ஏ அணி 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 165 ரன்கள் எடுத்துள்ளது.

இந்திய அணியில் துவக்க வீரர் ராபின் உத்தப்பா மீண்டும் 10 ரன்களில் சொதப்பி வெளியேற, மற்றொரு துவக்க விரர் கே.எல்.ராகுல் 52 ரன்கள் எடுத்தார். ஆட்ட முடிவில் தமிழக வீரர் பாபா அபராஜித் 20 ரன்களுடனும், கேப்டன் மனோஜ் திவாரி 50 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

முன்னதாக 288/7 என்று இன்று துவங்கிய ஆஸ்திரேலியா ஏ அணியை இந்திய சீனியர் அணி போலவே பிடியை விட்டது இந்திய ஏ அணி. ஆஸ்திரேலியா ஏ அணியின் பி.சி.ஜே.கட்டிங் 117 பந்துகளில் 5 பவுண்டரிகள் 4 சிக்சர்களுடன் 96 ரன்கள் விளாசினார். இவரும் பாய்ஸ் (57) என்பவரும் இணைந்து 8வது விக்கெட்டுக்காக 133 ரன்களைச் சேர்த்தனர்.

இந்தியா ஏ வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் யாதவ், நேதன் லயனை பவுல்டு செய்து கடைசி விக்கெட்டை வீழ்த்தியதோடு தனது 5வது விக்கெட்டையும் கைப்பற்றினார். அமித் மிஸ்ரா 4 விக்கெட்டுகளையும் தமிழக வீரர் பாபா அபராஜித் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

இந்திய இன்னிங்ஸில் குறிப்பிடத் தகுந்த அம்சம் என்னவெனில் முரளிதரனிடம் பாடம் பயின்று வரும் ஆஸ்திரேலிய ஆஃப் ஸ்பின்னர் நேதன் லயன் 13 ஓவர்கள் வீசி 52 ரன்களைக் கொடுத்து விக்கெட்டுகள் எதையும் கைப்பற்றவில்லை என்பதே.

முதல் டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் இரட்டைச் சதம் கண்ட நமன் ஓஜா 2வது இன்னிங்சிலும் அதிரடி சதம் அடித்தார். அவருடன் ராயுடுவும் சதம் அடித்தார். ஆட்டம் டிரா ஆனது.

இவர்கள் இருவரும் நாளை களமிறங்கி மீண்டும் அசத்துவார்களா என்பதைப் பார்க்க வேண்டும்.

SCROLL FOR NEXT