சென்னை: உலக பாட்மிண்டன் சம்மேளனம், ஆப்பிரிக்கா பாட்மிண்டன் கூட்டமைப்பு, மற்றும் உகாண்டா பாட்மிண்டன் அசோசியேஷன் ஆகியவை இணைந்து உகாண்டா நாட்டின் கம்பாலா நகரில் கடந்த ஜூலை3 முதல் 9-ம் தேதி வரை உகாண்டா பாரா-பாட்மிண்டன் தொடரை நடத்தின.
25 நாடுகளைச் சேர்ந்த 212 வீரர்கள் இப்போட்டியில் பங்கேற்றனர். இது 2024-ம் ஆண்டு பாரீஸில் நடைபெறவுள்ள பாராலிம்பிக்ஸுக்கு தகுதிப் போட்டிகளில் ஒன்றாகும். இந்த தொடரில் இந்திய அணி 13 தங்கம், 12 வெள்ளி, 17 வெண்கலம் என மொத்தம் 42 பதக்கங்களை வென்றது.
இந்திய அணியில் ராம்கோ சிமெண்ட் ஊழியர்கள் தினேஷ் ராஜய்யா, பிரேம்குமார் எழில் ஆகியோர் பங்கேற்றனர். இவர்களில் தினேஷ் ராஜய்யா ஆடவர் ஒற்றையர் மற்றும் இரட்டையர் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்றார். இரட்டையர் பிரிவில் தினேஷ் ராஜய்யா, பிரேம்குமார் எழிலுடன் இணைந்து களமிறங்கினார். இந்த ஜோடி வெண்கலப் பதக்கம் வென்றதன் மூலம் உலக பாரா பாட்மிண்டன் தரவரிசையில் 5 இடங்கள் முன்னேறி 10-வது இடத்தை பிடித்துள்ளனர்.
உகாண்டா தொடரில் பதக்கம்வென்ற இந்திய அணி வீரர்களுக்கு அந்நாட்டில் உள்ள தமிழ்ச் சங்கம் பாராட்டுவிழா நடத்தியது. இந்நிலையில் 2024 பாராலிம்பிக்ஸ் போட்டியில் வெற்றி பெற தினேஷ் ராஜய்யா மற்றும் இந்தியக் குழுவுக்கு ராம்கோ சிமெண்ட்ஸ் வாழ்த்து தெரிவித்துள்ளது.