டர்பன்: இனி ஐசிசி நடத்தும் கிரிக்கெட் தொடர்களில் ஆண்கள் மற்றும் பெண்கள் அணிகளுக்கு சமமான பரிசுத் தொகை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தென்னாப்பிரிக்காவின் டர்பன் நகரில் ஐசிசி ஆண்டுக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில்தான் இந்த முக்கிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது. 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பையிலும் சமமான பரிசுத் தொகை வழங்கப்படும் என்று ஐசிசி தலைவர் கிரெக் பார்க்லே தெரிவித்துள்ளார். "கிரிக்கெட் வரலாற்றில் இது ஒரு குறிப்பிடத்தக்க தருணம். சமமான வெகுமதி வழங்கப்படுவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்" என்று கிரெக் பார்க்லே குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக, இந்த ஆண்டின் தொடக்கத்தில் நடைபெற்ற மகளிர் டி20 உலகக் கோப்பையை வென்ற ஆஸ்திரேலியா 1 மில்லியன் அமெரிக்க டாலர்களை பரிசுத் தொகையாகப் பெற்றிருந்த நிலையில், நவம்பர் 2022ல் ஆண்கள் டி20 உலகக் கோப்பையை வென்ற இங்கிலாந்து, 1.6 மில்லியன் அமெரிக்க டாலர் பரிசுத் தொகையை வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
இதேபோல் ஸ்லோ ஓவர் ரேட் அபராதம் இனி இருக்காது என்றும் ஐசிசி கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதுவரை, ஸ்லோ ஓவர் ரேட் வீசும் அணிகளின் வீரர்களுக்கு 5 சதவீதம் முதல் 50 சதவீதம் வரை அபராதம் விதிக்கப்பட்டு வந்தது. சமநிலையை வழங்கும் நோக்குடன் இனி இந்த அபாரதங்கள் விதிக்கப்படாது என்று ஐசிசி கூட்டத்தில் பங்கேற்ற சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.