விளையாட்டு

தரவரிசையில் சானியா சாதனை: முதல் முறையாக 5-வது இடம் பிடித்தார்

செய்திப்பிரிவு

சர்வதேச டென்னிஸ் மகளிர் இரட்டையர் தரவரிசையில் இந்தியாவின் சானியா மிர்சா முதல்முறையாக 5-வது இடத்தைப் பிடித்து சாதனை படைத்தார்.

மகளிர் இரட்டையர் போட்டியில் ஜிம்பாப்வேயின் காரா பிளாக்குடன் இணைந்து சானியா விளையாடி வருகிறார். சர்வதேச டென்னிஸ் கூட்டமைப்பு திங்கள்கிழமை வெளியிட்ட புதிய தரவரிசைப் பட்டியலில் சானியா 5-வது இடத்தைப் பிடித்தார்.

சமீபத்தில் முடிவடைந்த விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் சானியா ஜோடி 2-வது சுற்றிலேயே வெளியேறிவிட்டது என்றாலும் தரவரிசைப் புள்ளிகள் அதிகம் கிடைத்ததன் மூலம் சானியா 6-வது இடத்தில் இருந்து 5-வது இடத்துக்கு முன்னேறினார்.

இது தொடர்பாக மகிழ்ச்சி தெரிவித்துள்ள சானியா, மூன்றாவது முறையாக அறுவை சிகிச்சை செய்து கொண்டபோது எனது டென்னிஸ் வாழ்க்கை ஏறக்குறைய முடிந்து விட்டது என்றே பேசப்பட்டது. அதன் பிறகு மீண்டும் டென்னிஸில் களமிறங்கி விளையாடியது கடினமான பயணமாக இருந்தது. ஆனால் இப்போது ஒரு முக்கிய இலக்கை எட்டியுள்ளேன். சர்வதேச அளவில் இரட்டையர் பிரிவில் 5-வது இடத்தை அடைந்துவிட்டேன் என்பது திருப்தி அளிக்கிறது என்று தெரிவித்தார்.

சோம்தேவ் பின்னடைவு

சர்வதேச ஆடவர் ஒற்றையர் தரவரிசையில் இந்தியாவின் சோம்தேவ் தேவ்வர்மன் 10 இடங்கள் பின்தங்கி 135-வது இடத்துக்கு வந்துள்ளார். ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் லியாண்டர் பயஸ் தொடர்ந்து 13-வது இடத்தில் உள்ளார். ரோஹன் போபண்ணா 3 இடங்கள் பின்தங்கி 20-வது இடத்துக்கு சென்றுள்ளார்.

SCROLL FOR NEXT