திருநெல்வேலி: டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரில் இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றுள்ளது லைகா கோவை கிங்ஸ்.
நேற்று இரவு திருநெல்வேலியில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் லைகா கோவை கிங்ஸ்–நெல்லை ராயல் கிங்ஸ் அணிகள் மோதின.
டாஸ் வென்ற கோவை அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி, முதலில் ஆடிய கோவை கிங்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 205 ரன்கள் குவித்தது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் சுரேஷ் குமார் 57 ரன்கள் குவித்து அவுட் ஆனார். அதேபோல் முகேஷ் மற்றும் அதீக் ரஹ்மானும் அதிரடியாக ஆடினர். இவர்கள் இருவரும் அரை சதம் கடந்தனர். அதீக் ரஹ்மான் 50 ரன்களில் அவுட்டாக, முகேஷ் 51 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இதன்பின் 206 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நெல்லை அணி கோவை அணியின் பந்துவீச்சில் சிக்கி சின்னாபின்னமானது.
துல்லியமாக பந்து வீசிய கோவை அணியின் பவுலர்களால் சீரான இடைவெளியில் விக்கெட்கள் வீழ்ந்தது. இறுதியில், நெல்லை அணி 101 ரன்களுக்கு ஆல் அவுட்டாக, 104 ரன்கள் வித்தியாசத்தில் கோவை கிங்ஸ் அணி அபார வெற்றி பெற்று, இரண்டாம் முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.
கோவை கிங்ஸ் சார்பில் ஜத்வேத் சுப்ரமணியம் 4 விக்கெட், ஷாருக் கான் 3 விக்கெட் வீழ்த்தினர் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தனர்.