கல்கரி: கனடா ஓபன் பாட்மிண்டன் தொடரில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் லக்ஷயா சென் சாம்பியன் பட்டம் வென்றார்.
கனடாவின் கல்கரி நகரில் நடைபெற்று வந்த இந்த தொடரில் ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் நேற்று முன்தினம் இரவு 19-ம் நிலை வீரரான இந்தியாவின் லக்ஷயா சென், ஆல் இங்கிலாந்து சாம்பியனும் 10-ம் நிலை வீரருமான சீனாவின் லி ஷி பெங்குடன் மோதினார். இதில் 21 வயதான லக்ஷயா சென் 21-18, 22-20 என்ற நேர் செட்டில்வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றார்.
இரண்டு வீரர்களுமே சில அசாதாரணமான ரேலிகளை விளையாடினர். கண்கவர் வகையில் துள்ளியாவறு சில ஸ்மாஷ்களை அதிவேகமாக விளையாடினர். லி ஷி பெங் இரு முறை 390 கி.மீ. வேகத்தில் ஸ்மாஷ்கள் அடித்தார். அதேவேளையில் லக்ஷயா சென் 400 கி.மீ. வேகத்தில் இரு முறை ஸ்மாஷ்கள் அடித்தார். இது பார்வையாளர்களைக் கவர்ந்தது.
500 புள்ளிகள் கொண்ட தொடரில் லக்ஷயா சென் பட்டம் கைப்பற்றுவது இது 2-வது முறையாகும். இதற்கு முன்னர் கடந்த 2022-ம் ஆண்டுநடைபெற்ற 500 புள்ளிகள் கொண்ட இந்தியா ஓபன் தொடரில் அவர், பட்டம் வென்றிருந்தார்.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் லக்ஷயா சென் தங்கப் பதக்கம் கைப்பற்றி இருந்தார். அதன் பிறகு தற்போதுதான் லக்ஷயா சென் பட்டம் வென்றுள்ளார். கடந்த மே மாதம் மலேசியா மாஸ்டர்ஸ் தொடரில் இந்தியாவின் ஹெச்.எஸ். பிரனாய் சாம்பியன் பட்டம் வென்றிருந்தார். அதன் பின்னர் இந்திய வீரர்களில் தற்போது லக்ஷயா சென் வாகை சூடியுள்ளார்.
வெற்றி குறித்து லக்ஷயா சென் கூறும்போது, “இது ஒலிம்பிக் போட்டிக்கான தகுதி சுற்று ஆட்டங்கள் நடைபெறும் வருடம். அப்படிஇருக்கும் போது நான் நினைத்தபடி விஷயங்கள் நடக்காதது கடினமாக இருந்தது. இந்த வெற்றி நம்பிக்கையை அதிகரிக்கச் செய்யும்.
லி ஷி பெங் கடினமான போட்டியாளர். எப்போதும் அவருக்கு எதிராக ஆட்டத்தில் நல்ல போட்டியை எதிர்பார்க்கலாம். இம்முறை அவருக்கு எதிராக நான் ஆதிக்கம் செலுத்தினேன். அவரும் தாக்குதல் ஆட்டம் தொடுத்தார். ஆனால் நான் முக்கியமான புள்ளிகளை வென்றேன்" என்றார்.