கார்சல்சன் 
விளையாட்டு

கிராண்ட் செஸ் டூர்: கார்சல்சன் சாம்பியன்

செய்திப்பிரிவு

ஜாக்ரெப்: கிராண்ட் செஸ் சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக சூப்பர் யுனைடெட் ரேபிட் மற்றும் பிளிட்ஸ் 2023 செஸ் போட்டிகள் குரோஷியா நாட்டின் ஜாக்ரெப் நகரில் நடைபெற்றன. இந்த தொடர் ரேபிட் பிரிவில் 9 சுற்றுகளையும், பிளிட்ஸ் பிரிவில் 18 சுற்றுகளையும் கொண்டதாக நடத்தப்பட்டது. ரேபிட் பிரிவு சுற்றுகளின் முடிவில் அமெரிக்காவின் ஃபேபியானே கருனா முதலிடம் பிடித்திருந்தார்.

இதைத் தொடர்ந்து பிளிட்ஸ் பிரிவில் போட்டிகள் நடைபெற்றன. இதன் முதல் நாளில் 9 சுற்று ஆட்டங்கள் நடைபெற்றன. முதல் நிலை வீரரான நார்வேயின் மேக்னஸ் கார்ல்சன் தனது 9 சுற்று ஆட்டங்களிலும் வெற்றி பெற்று 20 புள்ளிகளை பெற்றார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு மீதமுள்ள 9 சுற்று ஆட்டங்கள் நடைபெற்றன. இதில் ஃபேபியானோ கருனாவுக்கு எதிரான ஆட்டத்தில் கார்ல்சன் தோல்வியை சந்தித்தார்.

தொடர்ந்து போலந்தின் ஜான்-கிரிஸ்டோஃப் டுடாவுக்கு எதிரான ஆட்டத்தை டிராவில் முடித்தார். இதன் பின்னர் இந்தியாவின் குகேஷ், குரோஷியாவின் ஷாரிக், விஸ்வநாதன் ஆனந்த், ஈரானின் இயன் நெபோம்னியாச்சி ஆகியோரை தோற்கடித்து 25 புள்ளிகளுடன் சாம்பியன் பட்டம் வென்றார் கார்ல்சன். அவருக்கு ரூ.33 லட்சம் பரிசுத் தொகை வழங்கப்பட்டது.

இயன் நெபோம்னியாச்சி 22.5 புள்ளிகளுடன் 2-வது இடத்தையும், ஃபேபியானோ கருனா 21.5 புள்ளிகளுடன் 3-வது இடத்தையும், ஈரானின் அலிரேசா ஃபிரோஸ்ஜா 21 புள்ளிகளுடன் 4-வது இடத்தையும், இளம் இந்திய கிராண்ட் மாஸ்டரான டி.குகேஷ் 16 புள்ளிகளுடன் 6-வது இடத்தையும் பிடித்தனர். 5 முறை உலக சாம்பியனான விஸ்வநாதன் ஆனந்த் 7-வது இடத்துடன் தொடரை நிறைவு செய்தார்.

SCROLL FOR NEXT