ஜாக்ரெப்: கிராண்ட் செஸ் சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக சூப்பர் யுனைடெட் ரேபிட் மற்றும் பிளிட்ஸ் 2023 செஸ் போட்டிகள் குரோஷியா நாட்டில் நடைபெற்று வருகிறது. இதில் ரேபிட் பிரிவு போட்டிகள் முடிவடைந்த நிலையில் பிளிட்ஸ் பிரிவில் நேற்று முன்தினம் இரவு போட்டிகள் நடைபெற்றன. இதில் இந்திய கிராண்ட் மாஸ்டர்களான விஸ்வநாதன் ஆனந்த், குகேஷ் ஆகியோர் சரிவை சந்தித்தனர்.
விஸ்வநாதன் ஆனந்த் 9 ஆட்டங்களில் விளையாடி இரண்டில் மட்டுமே வெற்றி பெற்றார். சக நாட்டைச் சேர்ந்த குகேஷ் மற்றம் அமெரிக்காவின் ஃபேபியானோ கருனா ஆகியோருக்கு எதிராக மட்டுமே வெற்றியை பதிவு செய்தார் விஸ்வநாதன் ஆனந்த். குகேஷ், ருமேனியாவின் ரிச்சர்டு ராப்போர்டுக்கு எதிராக வெற்றியை பதிவு செய்த நிலையில் அதன் பின்னர் தொடர்ச்சியாக 4 ஆட்டங்களில் தோல்விகளை சந்தித்தார்.
இதையடுத்து நடைபெற்ற இரு ஆட்டங்களில் ருமேனியாவின் கான்ஸ்டான்டின் லுபுலெஸ்கு, போலந்தின் ஜான்-கிரிஸ்டோஃப் டுடா ஆகியோரை வீழ்த்தினார். எனினும் அடுத்த இரு ஆட்டங்களில் குரோஷியாவின் இவான் ஷாரிக், ஈரானின் இயன் நெபோம்னியாச்சி ஆகியோரிடம் தோல்வி அடைந்தார். 9 ஆட்டங்களின் முடிவில் விஸ்வநாதன் ஆனந்த், குகேஷ் ஆகியோர் தலா 13 புள்ளிகளுடன் 6-வது இடத்தில் உள்ளனர்.
உலகின் முதல் நிலை வீரரான நார்வேயின் மேக்னஸ் கார்ல்சன், 9 ஆட்டங்களிலும் வெற்றி பெற்று 20 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார். இயன் நெபோம்னியாச்சி, ஃபேபியோஸ் கருனா ஆகியோர் 2-வது இடத்தில் உள்ளனர்.