கொல்கத்தா: ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் வரும் அக்டோபர் 5-ம் தேதி இந்தியாவில் தொடங்குகிறது. 10 அணிகள் கலந்துகொள்ளும் இந்த தொடரில் அரையிறுதி இடத்திற்கான போட்டியில் இருக்கக்கூடிய ஐந்து அணிகளை இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி பட்டியலிட்டுள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது:
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் அரை இறுதிக்கு வரக்கூடிய அணிகளை கூறுவது கடினம். இருப்பினும் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, இந்தியா, நியூஸிலாந்து ஆகிய அணிகளுடன் பாகிஸ்தானையும் நான் சேர்த்துக்கொள்கிறேன். நியூஸிலாந்து அணியை ஒருபோதும் குறைத்து மதிப்பிட முடியாது. பாகிஸ்தான் அணி அரை இறுதிக்கு தகுதி பெற்றால் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இந்தியாவுடன் மோதுவதை பார்க்கலாம்.
ஐசிசி தொடர்களில் இந்திய அணி சில நேரங்களிலும், முக்கியமான கட்டங்களிலும் சிறப்பாக செயல்படுவதில்லை. இதை மன அழுத்தமாக நான் உணரவில்லை. ஆனால் திட்டங்களை களத்தில் எப்படி செயல்படுத்துகிறோம் என்பதை பற்றியது. இந்திய அணி வீரர்கள் மனதளவில் வலுவானவர்கள். அவர்கள், விரைவில் வெற்றி கோட்டை கடப்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. உலக டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப்பில் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றோம். இதுவே சாதனைதான்.
நெருக்கடி எப்போதுமே இருக்கும். இந்திய அணி இதற்கு முன்னர் விளையாடிய உலகக் கோப்பை தொடரிலும் நெருக்கடி இருந்தது. கடந்த உலகக் கோப்பையில் ரோஹித் சர்மா 5 சதங்கள் அடித்தார். அப்போதும் அவருக்கு நெருக்கடி இருந்திருக்கும் என்றே கருதுகிறேன். நெருக்கடி ஒரு பிரச்சினையே இல்லை. வெற்றிக்கான வழியை இந்திய அணியினர் கண்டறிவார்கள் என்று நம்புகிறேன்.
ராகுல் திராவிட் இந்திய அணிக்காக விளையாடும் போது செயல்திறனை வெளிப்படுத்த வேண்டும் என்ற நெருக்கடி இருந்தது. தற்போது அவர், பயிற்சியாளராக உள்ளார். இப்போது சிறப்பான முடிவுகளை கொடுக்க வேண்டும் என்ற நெருக்கடி இருக்கிறது. அது, எங்கும் செல்லாது.
இவ்வாறு கங்குலி கூறினார்.