காமன்வெல்த் துப்பாக்கி சுடுதல் போட்டியில் 25 மீ. பிஸ்டல் பிரிவில் இந்தியாவின் ராஹி சர்னோபட் தங்கப் பதக்கமும், அனிசா சயீத் வெள்ளிப் பதக்கமும் வென்றனர்.
சனிக்கிழமை நடைபெற்ற இந்தப் போட்டியின் அரையிறுதியில் சர்னோபட் முதலிடத்தையும், அனிசா 2-வது இடத்தையும் பிடித்து இறுதிச்சுற்றுக்கு முன்னேறினர். பின்னர் நடைபெற்ற இறுதிச்சுற்றில் சர்னோபட் 8-2 என்ற கணக்கில் அனிசாவை தோற்கடித்து தங்கப் பதக்கத்தைக் கைப்பற்றினார். இதேபிரிவில் ஆஸ்திரேலியாவின் லலிதா யாஹ்லீயூஸ்கயா வெண்கலப் பதக்கம் வென்றார்.
உலகக் கோப்பை போட்டியில் பிஸ்டல் பிரிவில் தங்கம் வென்ற முதல் இந்தியரான சர்னோபட், கடந்த முறை டெல்லியில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டியில் இரு தங்கப் பதக்கம் வென்றது குறிப்பிடத்தக்கது. வெள்ளிப் பதக்கம் வென்ற அனிசாவும் கடந்த காமன்வெல்த் போட்டியில் இரு தங்கப் பதக்கங்களை வென்றார்.