விளையாட்டு

ஜூலை 18-ம் தேதிக்குள் நீதிமன்றத்தில் ஆஜராக பிரிஜ் பூஷணுக்கு உத்தரவு

செய்திப்பிரிவு

புதுடெல்லி: பாலியல் துன்புறுத்தல் புகார் தொடர்பான வழக்கில் வரும் 18-ம் தேதிக்குள் ஆஜராக வேண்டும் என்று இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் முன்னாள் தலைவரும், பாஜக எம்.பி.யுமான பிரிஜ் பூஷண் சரண் சிங்குக்கு டெல்லி நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.

பாஜக எம்.பி. பிரிஜ் பூஷண் சிங் மீதான பாலியல் புகார் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மல்யுத்த வீராங்கனைகளான சாக்‌ஷி மாலிக், வினேஷ் போகத் மற்றும்முன்னணி வீரரான பஜ்ரங் பூனியா உள்ளிட்டோர் கடந்த கடந்த சில மாதங்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இதைத் தொடர்ந்து பிரிஜ் பூஷண் சரண் சிங் மீது டெல்லி காவல் துறையினர் 2 எப்ஜஆர் பதிவு செய்தனர். இதைத் தொடர்ந்து கடந்த ஜூன் 15-ம் தேதி பிரிஜ் பூஷண் மீது குற்றப் பத்திரிகை தாக்கல் செய்தனர்.

இந்நிலயில் இந்த வழக்கில் வரும் 18-ம் தேதிக்குள் ஆஜராக வேண்டும் என பிரிஜ் பூஷண் சிங்குக்கு டெல்லி கூடுதல் தலைமை பெருநகர மாஜிஸ்திரேட் நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.

மேலும், பதவி நீக்கம் செய்யப்பட்ட இந்திய மல்யுத்த சம்மேளன துணை செயலாளர் வினோத் தோமரும் ஆஜராக வேண்டும் என்றும் நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது. குற்றம் சாட்டப்பட்டுள்ள இருவரும் டெல்லியில் வசிப்பவர்கள் என்பதால் அவர்களுக்கு குறுகியகாலத்தில் ஆஜராக வேண்டும் என்று சம்மன் அனுப்பப்பட்டுள்ளது என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இதற்கான உத்தரவை மாஜிஸ்திரேட் ஹர்ஜீத் சிங் ஜஸ்பால் பிறப்பித்துள்ளார்.

SCROLL FOR NEXT