லீட்ஸ்: ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் 3-வது ஆட்டத்தில் இங்கிலாந்து அணியை முதல் இன்னிங்ஸில் 237 ரன்களுக்கு ஆட்டமிழக்க செய்து முன்னிலை பெற்றது ஆஸ்திரேலிய அணி.
ஹெட்டிங்லியில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 60.4 ஓவர்களுக்கு 263 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக மிட்செல் மார்ஷ் 118, டிராவிஸ் ஹெட் 39 ரன்கள் சேர்த்தனர். இங்கிலாந்து தரப்பில் மார்க்வுட் 5 விக்கெட்கள் வீழ்த்தினார். இதையடுத்து பேட் செய்த இங்கிலாந்து அணி முதல் நாள் ஆட்டத்தின் முடிவில் 19 ஓவர்களில் 3 விக்கெட்கள் இழப்புக்கு 68 ரன்கள் எடுத்தது. ஸாக் கிராவ்லி 33, பென் டக்கெட் 2, ஹாரி புரூக் 3 ரன்களில் ஆட்டமிழந்தனர்.
ஜோ ரூட் 19, ஜானி பேர்ஸ்டோ 1 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். நேற்று 2-வது நாள் ஆட்டத்தை தொடர்ந்து விளையாடிய இங்கிலாந்து அணியானது 52.3 ஓவர்களில் 237 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. ஜோ ரூட் 19, ஜானி பேர்ஸ்டோ 12, மொயின் அலி 21, கிறிஸ் வோக்ஸ் 10, மார்க்வுட் 24, ஸ்டூவர்ட் பிராடு 7 ரன்களில் நடையை கட்டினர். சீரான இடைவெளியில் விக்கெட்கள் சரிந்த நிலையிலும் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் மறுமுனையில் போராடினார்.
கடைசி வீரராக அவர், 108 பந்துகளில், 5 சிக்ஸர்கள், 6 பவுண்டரிகளுடன் 80 ரன்கள் எடுத்த நிலையில் டாட் மர்பி பந்தில் ஆட்டமிழந்தார். ஆலி ராபின்சன் 5 ரன்களுடன் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். ஆஸ்திரேலிய அணி சார்பில் பாட் கம்மின்ஸ் 6, மிட்செல் ஸ்டார்க் 2 விக்கெட்களை வீழ்த்தினர்.
வார்னர் அவுட்: 26 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்ஸை விளையாடிய ஆஸ்திரேலிய அணி 16 ஓவர்கள் வீசப்பட்ட நிலையில் ஒரு விக்கெட் இழப்புக்கு 39 ரன்கள் எடுத்தது. டேவிட் வார்னர் ஒரு ரன்னில், ஸ்டூவர்ட் பிராடு பந்தில் ஆட்டமிழந்தார். உஸ்மான் கவாஜா 23, மார்னஷ் லபுஷேன் 14 ரன்களுடன் களத்தில் இருந்தனர்.