டாக்கா: வங்கதேச அணியின் தொடக்க ஆட்டக்காரர் தமிம் இக்பால் தனது ஓய்வு அறிவிப்பை திரும்ப பெற்றுள்ளார்.
வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா கேட்டுக்கொண்டதால் ஓய்வு அறிவிப்பை திரும்ப பெறுவதாக தமிம் இக்பால் தெரிவித்துள்ளார். பிரதமர் ஷேக் ஹசீனாவை சந்தித்த பின் பேசிய தமிம், "பிரதமர் என்னை அவரது வீட்டிற்கு அழைத்தார். அவர் என்னை மீண்டும் விளையாட அறிவுறுத்தினார். எனவே நான் ஓய்வு அறிவிப்பை திரும்ப பெற முடிவு செய்துள்ளேன்.
மற்றவர்கள் யார் கேட்டாலும் என்னால் மறுத்திருக்க முடியும். ஆனால், பிரதமரின் அதிகாரத்தில் உள்ள ஒருவர் கேட்கும் என்னால் மறுப்பு தெரிவிக்க முடியவில்லை. எனினும், சிகிச்சை மற்றும் விஷயங்களுக்காக ஒன்றரை மாதம் இடைவெளி எடுத்துக்கொண்டு மீண்டும் விளையாடுவேன். பிரதமர் இதற்கு ஒப்புதல் கொடுத்துள்ளார்" இவ்வாறு தெரிவித்தார்.
ஓய்வு பின்னணி: தமிம் இக்பால் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் ஆடிய பிறகே அனைத்துக் கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெறுவதாகக் கண்ணீர் மல்க அறிவித்தார். 34 வயதிலேயே அவர் ஓய்வு அறிவித்தது வங்கதேச ரசிகர்களை கடும் அதிர்ச்சியிலும் சோகத்திலும் ஆழ்த்தியுள்ளது.
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான அந்த முதல் ஒருநாள் போட்டியே வங்கதேசத்தின் தோல்வியாகவும் தமீம் இக்பால் ஆடிய கடைசிப் போட்டியாகவும் வங்கதேச ரசிகர்களுக்கு இரட்டைச் சோகமானது. தன் கடைசி ஒருநாள் போட்டியில் தமிம் 13 ரன்களையே அடித்தார். அவர் சிறிது காலமாக உடல் தகுதி பெற முடியாமல் காயத்தினால் அவதியுற்று வந்தது குறிப்பிடத்தக்கது.
தமிம் இக்பால் 241 ஒருநாள் போட்டிகளில் 8,313 ரன்களை 36.62 என்ற சராசரியில் எடுத்துள்ளார். 14 சதங்களும் 56 அரைசதங்களும் இதில் அடங்கும். டெஸ்ட் கிரிக்கெட்டில் 70 போட்டிகளில் 5,134 ரன்களை எடுத்துள்ளார் தமிம். சராசரி 39.10 சதங்களும் 31 அரைசதங்களையும் அவர் எடுத்துள்ளார். 78 டி20 சர்வதேசப் போட்டிகளில் 1758 ரன்களை எடுத்ததோடு ஒரு சதமும் எடுத்துள்ளார்.