வங்கதேச அணியின் ஆல் டைம் டாப் கிளாஸ் தொடக்க இடது கை ஸ்டைலிஷ் ஆட்டக்காரர் தமிம் இக்பால் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் ஆடிய பிறகே அனைத்துக் கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெறுவதாகக் கண்ணீர் மல்க அறிவித்தார். 34 வயதிலேயே அவர் ஓய்வு அறிவித்தது வங்கதேச ரசிகர்களை கடும் அதிர்ச்சியிலும் சோகத்திலும் ஆழ்த்தியுள்ளது.
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான அந்த முதல் ஒருநாள் போட்டியே வங்கதேசத்தின் தோல்வியாகவும் தமீம் இக்பால் ஆடிய கடைசிப் போட்டியாகவும் வங்கதேச ரசிகர்களுக்கு இரட்டைச் சோகமானது. தன் கடைசி ஒருநாள் போட்டியில் தமிம் 13 ரன்களையே அடித்தார். அவர் சிறிது காலமாக உடல் தகுதி பெற முடியாமல் காயத்தினால் அவதியுற்று வந்தது குறிப்பிடத்தக்கது.
தமிம் இக்பால் 241 ஒருநாள் போட்டிகளில் 8,313 ரன்களை 36.62 என்ற சராசரியில் எடுத்துள்ளார். 14 சதங்களும் 56 அரைசதங்களும் இதில் அடங்கும். டெஸ்ட் கிரிக்கெட்டில் 70 போட்டிகளில் 5,134 ரன்களை எடுத்துள்ளார் தமிம். சராசரி 39.10 சதங்களும் 31 அரைசதங்களையும் அவர் எடுத்துள்ளார். 78 டி20 சர்வதேசப் போட்டிகளில் 1758 ரன்களை எடுத்ததோடு ஒரு சதமும் எடுத்துள்ளார்.
அச்சமின்றி ஆடக்கூடிய தொடக்க வீரர் 2007 உலகக் கோப்பையில் இந்திய பவுலர்கள் ஜாகீர் கான், முனாப் படேல் ஆகியோரை இறங்கி வந்து சிக்சர்களை விளாசியதை மறக்க முடியாது. பாகிஸ்தான் முன்னாள் தொடக்க வீரர் சயீத் அன்வர் பாணியில் தன் பேட்டிங்கை வடிவமைத்துக் கொண்டவர் தமிம் இக்பால். நிச்சயமாக வங்கதேசம் மறக்க முடியாத ஒரு ஸ்டார் பிளேயர்தான் தமிம் இக்பால்.
அவரது தனித்தன்மையை காட்டும் சில புள்ளி விவரங்களைப் பார்ப்போம்: தமிம் இக்பால் 8,313 ரன்களை ஒருநாள் போட்டிகளில் எடுத்துள்ளார். வங்கதேசத்தின் 8,000 ரன்களை கடந்த ஒரே வீரர் தமிம்தான். இவர் அடித்த 14 ஒருநாள் சதங்களும் வங்கதேச சாதனை. இவர்தான் அதிக ஒருநாள் சதங்களை வங்கதேசத்துக்காக எடுத்துள்ளார். மற்ற வீரர்கள் 10 சதங்களை கூட எடுத்ததில்லை. மொத்தம் 15,148 ரன்களுடன் வங்கதேசத்துக்காக அதிக சர்வதேச ரன்களை எடுத்த வீரரும் தமிம் இக்பால்தான். மூன்று வடிவங்களிலும் தமிம் எடுத்த 25 சதங்களும் வங்கதேச சாதனைப் பட்டியலில் முதலிடம் வகிக்கின்றது.
ஏப்ரல் 2015 முதல் டிசம்பர் 2018 வரை தமிம் இக்பாலின் ஒருநாள் சர்வதேச போட்டிகளின் சராசரி 62.83. இது உலக அளவில் ஒரு குறிப்பிட்ட காலக்கட்டத்தில் வைத்திருக்கும் அதிக சராசரியில் 4வது நிலையாகும். இதில் விராட் கோலி முதலிடம், ராஸ் டெய்லர் 2ம் இடம். ரோஹித் சர்மா 3வது இடம். இந்த 45 மாத காலக்கட்டத்தில் 44 இன்னிங்ஸ்களில் தமிம் இக்பால் 2325 ரன்களைக் குவித்தார். அதேபோல் டி20 சர்வதேச கிரிக்கெட்டில் சதம் கண்ட ஒரே வங்கதேச வீரர் தமிம் இக்பால்தான்.
டெஸ்ட்டில் இரட்டைச் சதம், ஒருநாள் சர்வதேசப் போட்டியில் 150, டி20-யில் சதம் கண்ட வகையில் உலகின் 6 வீரர்களில் தமிமும் ஒருவர். 2016-ல் இந்த ட்ரிபிள் சாதனையை தமிம் செய்யும்போது பிரெண்டன் மெக்கல்லமும், கிறிஸ் கெய்லும்தான் இந்தச் சாதனையில் இவருக்கு முன்னோடியாக இருந்தனர். பிற்பாடுதான் இந்த ட்ரிபிள் பட்டியலில் விராட் கோலி, ரோஹித் சர்மா, டேவிட் வார்னர் இணைந்தனர்.
டெஸ்ட்டில் தமிம் இக்பால் எடுத்த 5,134 ரன்கள் 2ம் இடத்தில் உள்ளது, முஷ்பிகுர் ரஹிம் 5553 ரன்களுடன் வங்கதேச பேட்டர்கள் பட்டியலில் முதலிடம் வகிக்கிறார். 2015 முதல் 2020 வரை தமிம் இக்பால்தான் வங்கதேசத்தின் டெஸ்ட் போட்டிகளில் அதிக ரன்கள் எடுத்த வீரராகத் திகழ்ந்தார்.
தமிம் இக்பால் எடுத்த டெஸ்ட் அதிகபட்ச ஸ்கோரான 206 ரன்களை பாகிஸ்தானுக்கு எதிராக குல்னாவில் 2015ம் ஆண்டு எடுத்தார். இதே போட்டியில் இம்ருல் கயேஸுடன் இணைந்து 312 ரன்களை முதல் விக்கெட்டுக்காகச் சேர்த்தனர். இது 2வது இன்னிங்ஸில் எந்த அணியும் எடுக்காத உலக சாதனை தொடக்கக் கூட்டணி ரன்களாகும். 451 சந்தர்ப்பங்களில் 450 முறை தொடக்க வீரராகவே களமிறங்கியுள்ளார் தமிம் இக்பால், இது ஒரு தனித்துவ சாதனையாகும்.