கொல்கத்தா: இந்திய அணி 2011-ம் ஆண்டு உலகக் கோப்பையை வென்றது போன்று இம்முறையும் வெல்லும் என இந்திய கிரிக்கெட் மகளிர் அணியின் முன்னாள் வீராங்கனை ஜூலன் கோஸ்வாமி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் வரும் அக்டோபர் 5-ம் தேதி இந்தியாவில் தொடங்குகிறது. இதையொட்டி இந்த தொடருக்கான டிராபி பல்வேறு நகரங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இதன் ஒரு கட்டமாக நேற்று கொல்கத்தாவுக்கு டிராபி கொண்டுவரப்பட்டது. இதற்கான நிகழ்ச்சியில் பங்கேற்ற இந்திய கிரிக்கெட் மகளிர் அணியின் முன்னாள் வீராங்கனை ஜூலன் கோஸ்வாமி கூறியதாவது:
உலகக் கோப்பையை வெல்வது என்பது ஒவ்வொரு கிரிக்கெட் வீரரின் பிரதான இலக்காக இருக்கும். ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பையை வெல்லும் கனவு நினைவாக வேண்டும் என்றே ஒவ்வொரு வீரரும் கருதுவார்கள். தடகள வீரர்களுக்கு ஒலிம்பிக் போட்டி எந்த அளவுக்கு முக்கியமோ அதுபோன்றதுதான் ஒவ்வொரு கிரிக்கெட் வீரர்களுக்கும் 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் அதிமுக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது.
தோனி சிக்ஸர் விளாச இந்திய அணி 28 வருடங்களுக்கு பிறகு உலகக் கோப்பையில் சாம்பியன் பட்டம் வென்றது. இது அனைவருக்கும் உற்சாகத்தை கொடுத்தது. இம்முறை மீண்டும் இந்திய அணி கோப்பையை வெல்லும் என்ற நம்பிக்கை உள்ளது. தயவு செய்து இந்த முறையும் நமது ஹீரோக்களை ஆதரிக்க வேண்டும். வெற்றியும் தோல்வியும் விளையாட்டின் ஒரு பகுதி. ஆனால் என்றென்றும் வீரர்கள் நமது ஹீரோக்களாக இருப்பார்கள். இவ்வாறு ஜூலன் கோஸ்வாமி கூறினார். - பிடிஐ