புதுடெல்லி: தெற்காசிய கூட்டமைப்பு கால்பந்துப் போட்டியில் (எஸ்ஏஎப்எப்) சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணிக்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
பெங்களூருவில் நேற்று முன்தினம் நடைபெற்ற இறுதிப் போட்டியில் இந்திய அணி, குவைத்தை 5-4 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது. இதன் மூலம் 9-வது முறையாக இந்திய அணி சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றி சாதனை படைத்தது.
இதைத் தொடர்ந்து இந்திய கால்பந்து அணிக்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டுகளைத் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது:
இந்தியா சாம்பியன் பட்டத்தை மீண்டும் வென்று மகுடம் சூடியுள்ளது. 2023 தெற்காசிய கால்பந்து கூட்டமைப்புப் போட்டியில் நீல நிற புலிகள் மீண்டும் சிறப்பாக விளையாடி சாதனை படைத்துள்ளனர். கோப்பையை வென்ற இந்திய அணி வீரர்களுக்கு எனது வாழ்த்துக்கள்.
இந்திய கால்பந்து அணி வீரர்களின் உறுதி, சிறப்பான விளையாட்டின் காரணமாக தொடர்ந்து வெற்றிப் பயணத்தில் இருக்கிறோம். இந்திய அணியின் குறிப்பிடத்தக்க இந்த பயணம், வளர்ந்து வரும் விளையாட்டு வீரர்களுக்கு தொடர்ந்து ஊக்கமளிக்கும். இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்.