லார்ட்ஸ்: ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் 2-வது ஆட்டத்தில் இங்கிலாந்து அணிக்கு 371 ரன்களை இலக்காக நிர்ணயித்தது ஆஸ்திரேலிய அணி.
லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணி 416 ரன்களும், இங்கிலாந்து அணி 325 ரன்களும் எடுத்தன. 91 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்ஸை விளையாடிய ஆஸ்திரேலிய அணி 3-வது நாள் ஆட்டத்தின் முடிவில் 45.4 ஓவர்களில் 2 விக்கெட்கள் இழப்புக்கு 130 ரன்கள் எடுத்தது. டேவிட் வார்னர் 25, மார்னஷ் லபுஷேன் 30 ரன்களில் ஆட்டமிழந்தனர். உஸ்மான் கவாஜா 58, ஸ்டீவ் ஸ்மித் 6 ரன்களுடன் களத்தில் இருந்தனர்.
நேற்று 4-வது நாள் ஆட்டத்தை தொடர்ந்து விளையாடிய ஆஸ்திரேலிய அணி 101.5 ஓவர்களில் 279 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. உஸ்மான் கவாஜா 187 பந்துகளில், 12 பவுண்டரிகளுடன் 77 ரன்கள் எடுத்த நிலையில் ஸ்டூவர்ட் பிராடு பந்தில் ஆட்டமிழந்தார். ஸ்டீவ் ஸ்மித் 34 ரன்களில் ஜோஷ் டங் பந்தில் வெளியேறினார். டிராவிஸ் ஹெட் 7, கேமரூன் கிரீன் 18, அலெக்ஸ் கேரி 21, பாட் கம்மின்ஸ் 11, ஜோஷ் ஹேசில்வுட் 1 ரன்னில் ஆட்டமிழந்தனர்.
கணுக்கால் காயத்தால் அவதிப்பட்ட நேதன் லயன், காலில் கட்டுப் போட்டிருந்த நிலையிலும் பேட் செய்ய களமிறங்கினார். 13 பந்துகளை சந்தித்த அவர், 4 ரன்களை எடுத்த நிலையில் கடைசி வீரராக ஆட்டமிழந்தார். கடைசி விக்கெட்டுக்கு அவர், மிட்செல் மார்ஷுடன் இணைந்து 15 ரன்கள் சேர்த்தார்.
இங்கிலாந்து அணி சார்பில் ஸ்டூவர்ட் பிராடு 4 விக்கெட்களையும் ஜோஷ் டங், ஆலி ராபின்சன் ஆகியோர் தலா 2 விக்கெட்களையும் ஆண்டர்சன், பென் ஸ்டோக்ஸ் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர். இதையடுத்து 371 ரன்கள் இலக்குடன் இங்கிலாந்து அணி பேட்டிங் செய்யத் தொடங்கியது.